கடந்த ஒருவாரமாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் கலத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91.98 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 85.31 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர ஆரம்பித்துள்ளது.
அதுவும் சேலம் மற்றும் மதுரையில் ஒரு கிலோ கறிவேப்பிலையின் விலையை கேட்டு இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம் மதுரையில் கிலோ 100 ரூபாய்க்கும், சேலத்தில் கிலோ 150 ரூபாய்க்கும் கறிவேப்பிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இல்லத்தரசிகள் தங்களுடைய சமையலில் அன்றாடம் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய முக்கிய பொருளான கறிவேப்பிலையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறிகளை வாங்கினாலே இலவசமாக அள்ளிக்கொடுக்கப்படும் கறிவேப்பிலையை இனி கிள்ளிக்கூட கொடுக்க முடியாத நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்ட விலையை விட காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது ஏழை, எளிய மக்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் இன்று 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 50 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் சேலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் பட்சத்தில் மலையில் இருந்து வரும் காய்கறிகளான பீன்ஸ், கேரட் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.