
வீட்டில் ஏதேனும் விசேஷங்கள் நடக்கும் போது அல்லது விழா காலங்களில் வாயில்களில் தோரணம் கட்டி தொங்கவிடுவது வழக்கம். இவை வீட்டிற்கு கூடுதல் அழகை தருவது மட்டுமின்றி பல்வேறு நன்மைகளையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. விசேஷ காலங்களில் வீட்டில் மாவிலை தோரணங்கள் கட்டுவது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.
கோயில் திருவிழாக்களிலும் தோரணங்கள் தவிர்க்கவே முடியாதவை. இவை மங்களகரமான தோற்றத்தை அளிக்கக் கூடியவை. தோரணங்கள் தயார் செய்ய அதிக செலவு செய்யத் தேவையில்லை. இயற்கையில் கிடைக்கும் பொருள்களே தோரணங்கள் செய்ய போதுமானவை. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட சுப வைபவங்களில் கட்டாயம் தோரணங்கள் இருக்கும். இப்படி வீட்டு வாசலில் தோரணங்கள் தொங்கவிட ஏதேனும் சிறப்பு காரணங்கள் உள்ளனவா என்பதை இங்கு காணலாம்.
நம்முடைய பண்பாட்டில் உள்ள பல விஷயங்களை கூர்ந்து கவனித்தால் அதில் பல மறைமுகமான நன்மைகள் இருக்கும். உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் அவைகளுக்கு இருக்கும். இப்படி நம் முன்னோர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றும் பல விஷயங்கள் அறிவியல்ரீதியா பலனுள்ளவையாக இருக்கும்.
முந்தைய காலங்களில் சுபவிசேஷங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பழக்கம் இல்லை. ஒரு வீட்டில் நல்லதோ கெட்டதோ நடக்கிறது என்றால் அதை குறிக்க வீட்டு வாசலில் கட்டப்படும் தோரணங்கள் உதவின. தோரணங்கள் கட்டப்படும் முறையை வைத்தே என்ன விசேஷம் என கண்டுபிடிக்கலாமாம். தோரணமே கட்டவில்லை என்றால் வீட்டு வாசலில் ஒரு கொத்து மாவிலைகள், வேப்பிலைகளை வைத்திருப்பார்கள். இதற்கும் தனி காரணங்கள் உண்டு. இவை குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இதையும் படிங்க: வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருகிறதா? இதுதான் காரணம்!!
தென்னங் குருத்தோலை:
தென்னங் குருத்தோலைகளைக் கொண்டு தயார் செய்யும் குருத்தோலைத் தோரணங்கள் மங்கள மற்றும் அமங்களத் தோரணங்கள் என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன. இதில் உள்ள மடிப்புகள், வடிவமைப்புகளை குருவிகள் என்கிறார்கள். சமயம் சார்ந்த விழாக்களிலும், திருமணம் போன்ற சுபநிகழ்விலும் பயன்படுத்தும் தோரணங்கள் மங்களத் தோரணங்களாகும்.
இந்த வகை தோரணங்களில் சிறப்பே '4' குருவிகள் இருக்கும். அந்தக் குருவிகளின் தலை மேலேயும், வால் பகுதி கீழேயும் நோக்கி இருக்கும். இதுவே மரணம் போன்ற துயர்மிகு நிகழ்வுகளில் அமங்கள தோரணம் கட்டப்படும். இதில் மூன்று குருவிகள் அமைந்திருக்கும். இது மங்கள தோரணத்திற்கு எதிர்மறையான அமைப்புடையது. இத்தோரணங்களில் குருவிகளுடைய தலை கீழேயும், வால் மேலேயும் நோக்கி இருக்கும். முன்னோர்களின் குறியீடுகள் எவ்வளவு நுட்பமானவகளாக உள்ளன.
இதையும் படிங்க: ஒருத்தர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் கொட்டாவி வருதே ஏன் தெரியுமா? அதுக்கு இப்படி ஒரு வரலாறா?!
மாவிலைகளில் தோரணம்:
இந்து சமயத்தில் மங்கள அடையாளமாக மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இன்றும் அனைத்து பண்டிகைகளிலும் மக்கள் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள். அதிலும் விசேஷ நாட்களில் வீட்டு நிலவாசற்படியில் மாவிலைத் தோரணம் கட்டுவது தவிர்க்க முடியாத பாரம்பரியாக உள்ளது. இதனால் வீட்டிற்குள் துயர் தரும் கெட்ட சக்திகள் எதுவும் வர இயலாது என்பது ஐதீகம்.
வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது எப்படி?
மஞ்சள் தேய்த்த நூலில் மாவிலைகளை (ஒரே அளவில்) கட்டிக் கொள்ள வேண்டும். மாவிலைகளில் மஞ்சள் பூசி அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். இதனை நிழலில் காய வைத்தி வீட்டு வாசலில் கட்டுங்கள். மாவிலை தோரணத்தை சும்மா கட்டக் கூடாது. அதற்கென உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். தோரணம் கட்டும்போது அதிலுள்ள மாவிலைகள் 11 ஆக இருக்கலாம். கூடுதலாக என்றால் 21 அல்லது 101 என்ற எண்ணிக்கையில் மட்டுமே மாவிலைகளைக் கோர்த்து தோரணம் கட்ட வேண்டும்.
சமயம் தொடர்பான விழாக்கள் என்றால் மாவிலைத் தோரணம் செய்யும்போது அதனுடன் வேப்பிலைக் கொத்துகளை சேர்ப்பார்கள். மாவிலைகளின் அற்புத சக்தி என்னவெனில் அவை பறித்த பின்னரும் கூட கரியமில வாயுவை எடுத்துக் கொள்பவை. மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை வெளியிட்டு கரியமில வாயுவை எடுத்து கொள்ளும். மாவிலை தோரணங்கள் நம் வீட்டிற்குள்ளும், வெளியிலும் காணப்படும் கெட்ட ஆற்றலை அகற்றும். நேர்மறை ஆற்றலை வீட்டில் தக்க வைக்கும்.
மாவிலை தோரணங்களின் சிறப்பு!
மாவிலைகளில் மகாலட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் வாசம் செய்வார்கள் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
மாவிலை தோரணம் நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கக் கூடியது. அதுமட்டுமின்றி மாவிலைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவான கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக் கொள்ளும். வேப்பிலைகள் காற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சு கொள்ளும் ஆற்றல் உடையது. இவை இரண்டும் அழுகிபோகாத இலைகளாகும். மட்கி சருகாகுமே தவிர அழுகாது. அதனாலேயே தோரணங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வேப்பிலையில் தோரணம்:
மஞ்சள் தோய்த்த ஒரு நூலில் வேப்பிலைகளை கொத்து கொத்தாக கட்டி வேப்பிலை தோரணம் செய்வார்கள். இந்த தோரணம் பொதுவாக அம்மன் கோயில் திருவிழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. திருவிழா நேரங்களில் தெருக்களில் இந்த தோரணத்தை கட்டுவார்கள். பச்சை கொடிகள் போல தெருவெங்கும் அவை அசைந்துகொண்டிருக்கும். அது திருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகும். இது தவிர, வீட்டில் உள்ளவர்களுக்கு அம்மை நோய்த்தொற்று ஏற்பட்டால் அவ்வீட்டில் வேப்பிலை தோரணம் அமைப்பார்கள். வேப்பிலை பொதுவாக கிருமி நாசினியாக செயல்படுகிறது. அம்மை நோயை குணப்படுத்துவதில் வேப்பிலை முக்கிய பங்காற்றுவதாக இன்றும் கிராமங்களில் நம்பப்படுகிறது.
பூத்தோரணங்கள்:
பொதுவாக அலங்காரத்திற்காகத்தான் கோயில்களிலும் வீடுகளிலும் பூத்தோரணங்கள் கட்டுவார்கள். இந்த தோரணங்களில் ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்ற அழகான மற்றும் வாசனையான பூக்களை பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் விழாக்களில், பெண் குழந்தைகளின் சடங்கு விழாவில் என சுப நிகழ்ச்சிகளில் பூத்தோரணங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொங்கல் விழாவின்போது பூளைப் பூ, ஆவாரம் பூ ஆகியவற்றில் தோரணமாக கட்டுவது விசேஷமானது.