
வெண்டைக்காய் மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது. அதனுடைய சுவை மட்டுமின்றி மருத்துவ பயன்களுக்காகவும் பரவலாக அறியப்படுகிறது. வெண்டைக்காய் சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். இதை சமைத்து உண்பதை விடவும் பச்சையாக சாப்பிடுவதால் பல சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் வெண்டைக்காயை சமைக்காமல் உண்ணும் போது புரதச்சத்து, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் போன்றவை கிடைப்பதாக தெரியவந்துள்ளது. நாள்தோறும் வெண்டக்காயை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. வெண்டைக்காயை குறித்து நீங்கள் அறியாத பல உண்மைகளை இந்த பதிவில் காணலாம்.
வெண்டைக்காயின் ஊட்டச்சத்துகள்:
வெண்டைக்காயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் சி அதிகமுள்ளது. எலும்புகளுக்கு தேவையானதும், ரத்த உறைதலை ஊக்குவிக்கும் ஆற்றல் கொண்ட வைட்டமின் கே வெண்டைக்காயில் உள்ளது. மெக்னீசியம், ஃபோலேட் ஆகிய சத்துக்களும் காணப்படுகின்றன. வெண்டைக்காயில் இருக்கும் பாலிபினால்கள் மாதிரியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன. இவை வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.
எடை குறைப்பு:
எடையை குறைக்கும் பயணத்தில் வெண்டைக்காய் மிகுந்த உதவியாக இருக்கும். நீங்கள் 100 கிராம் வெண்டைக்காய் உண்ணும் போது அதிலிருந்து 33 கலோரிகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது. அதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். இதில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. நீண்ட நேரம் உங்களுக்கு பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை தரக்கூடிய காய்கறிகளில் வெண்டைக்காயும் குறிப்பிட தகுந்தது. வெண்டைக்காய் உடலில் குளுக்கோஸ் அளவை குறைக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
வெண்டைக்காய் விதைகள் பற்றி தெரியுமா?
வெண்டைக்காய் விதைகளை வறுத்து அதில் காபி தயாரிக்க முடியும். போர்க்காலங்களில் காபிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது இந்த விதைகளில் காபி தயாரிப்பார்களாம். இந்த விதைகளில் காபி கொட்டைகளில் உள்ள காஃபின் கிடையாது. ஆனால் வறுத்த வெண்டைக்காய் விதைகளில் தயார் செய்யும் காபி வாசனையாவும் சுவையாகவும் இருக்கும். அதிகளவில் காபி குடிக்கும் நபர்கள் வெண்டைக்காய் விதைகளில் தயார் செய்யும் காபியை குடிக்கலாம்.
இதையும் படிங்க: வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வச்சி குடிச்சா இத்தனை நன்மைகளா?!
பல நோய்க்கு மருந்தாகும் வெண்டைக்காய்!
வெண்டைக்காயில் உள்ள சளி போன்ற பொருள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. நம் உடலில் இரத்த அளவை அதிகரிக்க இந்த சளி உதவியாக இருக்கும். வெண்டைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. அதனால் தொண்டை புண், செரிமான பிரச்சினைகளை நீக்க பேருதவி புரியும். நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் உண்பதால் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தை முன்கூட்டியே குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியம்:
வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டால் இதய இயக்கத்திற்கு உதவும். வெண்டைக்காயில் காணப்படும் நார்ச்சத்து கரையக்கூடியதாகும். இது நம் உடலில் உள்ள செரிமான மண்டலத்தில் படிந்துள்ள கொலஸ்ட்ராலுடன் இணைந்து, அங்கிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வெண்டைக்காயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய செயல்பாட்டிற்கு உதவுகிறது.
இதையும் படிங்க: முழுபலன்களை பெற வெண்டைக்காய் கூட இந்த '5' உணவுகளை சாப்பிடக் கூடாது!!