பாம்பன் பாலம் மட்டுமா! ஆங்கிலேயர்கள் கட்டிய இந்தியாவின் டாப் 5 பாலங்கள் உங்களுக்கு தெரியுமா ?

First Published Nov 2, 2022, 5:46 PM IST

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 5 பாலங்களை கண்டு மக்கள் இன்றும் வியக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பல்வேறு ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் அதன் பழமை மாறாமல், உயிர்ப்புடன் இருப்பதே காரணம் ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் இன்னும் அதே உயிர்ப்புடன் நிற்கிறது. இவற்றுள் சில பாலங்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலானவை. அத்தகைய ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட டாப் 5 பாலங்களை இங்கு பார்க்கலாம்.

பாம்பன் பாலம், தமிழ்நாடு:

கட்டுமானம் முடிந்தது: 1914, நீளம்: 6776 அடி

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பாம்பன் பாலம் இந்தியாவின் வரலாற்று ரயில் பாலங்களில் முக்கியமானதாகும். ராமேஸ்வரத்தை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரே ரயில் பாலம் இந்தப் பாலமாகும். இந்த பாலத்தின் கட்டுமானம் 1911ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 24 பிப்ரவரி 1914 அன்று திறக்கப்பட்டது. 2010ம் ஆண்டு பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பு கட்டப்படுவதற்கு முன்பு, இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது.  இந்த பாலத்தின் மீது ரயில் செல்வதை பார்ப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம். தற்போது இந்த பாலத்திற்கு இணையாக புதிய பாம்பன் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் (2023) இதன் பணிகள் நிறைவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

பழைய கோதாவரி பாலம், ஆந்திரப் பிரதேசம்:

கட்டுமானம் முடிந்தது: 1900, நீளம்: 2.7 கி.மீ

ஆந்திராவில் உள்ள பழைய கோதாவரி பாலம் ஹேவ்லாக் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக இந்த ரயில் பாலம் மெட்ராஸ் மற்றும் ஹவுராவை இணைக்கிறது. இந்த பாலத்தின் கட்டுமானம் 11 நவம்பர் 1897 இல் தொடங்கியது. இது அந்த நேரத்தில் சென்னையின் ஆளுநராக இருந்த சர் ஆர்தர் எலிபாங்க் ஹேவ்லாக் பெயரிடப்பட்டது. பின்னர் அது கோதாவரி பாலம் என்று அழைக்கப்பட்டது. பழைய பாலத்தின் ஆயுட்காலம் முடிந்ததும், அதன் அருகே கோதாவரி ஆர்ச் பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது இது புதிய கோதாவரி பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

பாலம் எண்- 541, இமாச்சல பிரதேசம்:

கட்டுமானம் முடிந்தது: 1898, நீளம்: 174 அடி

கானோ ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பாலம் எண் - 541 ஆனது நம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமானது. பிரிட்டிஷ் காலத்தில் கல்கா - சிம்லா ரயில் பாதையில் நிறைய பாலங்கள் கட்டப்பட்டிருந்தாலும், பாலம் எண் - 541 இன் அழகு 124 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே அழகுடன் இருப்பதை பார்த்தாலே புரியும். நான்கு மாடி ஆர்ச் கேலரி போல கட்டப்பட்ட இந்த பாலம், அந்த கால கட்டத்தில் செங்கல் மற்றும் மோட்டார் கொண்டு கட்டப்பட்டது. இன்றும், அதில் ரயில் இயக்கப்படுகிறது. உலகின் மிக உயரமான வளைவு பாலம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனேஷன் பாலம், மேற்கு வங்கம்:

கட்டுமானம் முடிந்தது: 1941, நீளம்: 400 அடி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் கொரோனேஷன் பாலம் உள்ளது. இதன் கட்டும் பணி 1937 ஆம் ஆண்டு தொடங்கியது. டீஸ்டா ஆற்றின் மேல் உள்ள இந்தப் பாலம் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி நகரை தேசிய நெடுஞ்சாலை உடன் இணைக்கிறது. ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின் போது அவரது நினைவாக இந்தப் பாலம் கட்டப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதனால்தான் இது முடிசூட்டுப் பாலம் என்று அழைக்கப்பட்டது.

ஹவுரா பாலம், கொல்கத்தா:

கட்டுமானம் முடிந்தது: 1942, நீளம்: 2313 அடி

ஹவுரா பாலம் இந்தியாவின் மிகவும் பிரபலமான பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1936ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1942ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த பாலம் உலகின் மூன்றாவது நீளமான பாலமாக இருந்தது. இந்தப் பாலத்தை வடிவமைத்த பெருமை சர் பிராட்ஃபோர்ட் லெஸ்லியையே சாரும். தற்போது, ​​இந்த பாலத்தின் பெயர் ரவீந்திர சேது என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

click me!