
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் மாறுபடும். சிலர் குழந்தை தவறு செய்யும்போது திட்டுவார்கள். சிலர் அதற்கு தண்டனை வழங்கி அத்தவறை மீண்டும் செய்யாதவாறு தடுக்க நினைப்பார்கள். ஆனால் இவை சர்வாதிகார அணுகுமுறை ஆகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை கட்டுபடுத்துவதை உறுதிப்படுத்துவதையும், அவர்கள் தங்களுக்கு கீழ்ப்படிதலை உறுதி செய்வதையும் இந்த வழிமுறைகள் நோக்கமாக கொண்டிருக்கிறது.
இந்த வழிமுறைகளை பின்பற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடத்தையை ஒழுக்கமாக வடிவமைப்பதாக நம்புகிறார்கள். குழந்தைகளின் மோசமான நடத்தைகளை சரி செய்ய, எதிர்காலத் தவறுகளை முன்கூட்டியே தடுக்க, அவர்களை திட்டுவது தான் ஒரே வழி என நினைக்கிறார்கள். ஆனால் இதனால் மோசமான பாதிப்புகள் தான் ஏற்படும். அவை குறித்து இங்கு காணலாம்.
எந்த இடத்தில் வைத்து கண்டிக்க வேண்டும்?
குழந்தையை பொது இடங்களில் வைத்தோ அல்லது பிறர் முன்பாகவோ நெறிப்படுத்த முயற்சி செய்தால் குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் உறவில் பாதிப்பு ஏற்படும். இதனை குழந்தைகள் அவமானமாக கருதுவார்கள். இப்படி செய்யும்போது வெட்கமாகவும், மனதளவில் வேதனையும் அடைவார்கள். தங்களின் சுயமதிப்பீட்டில் குழந்தைகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். தாழ்வு மனப்பான்மை வரலாம்.
இந்த மாதிரி கண்டிக்காமல் தனிப்பட்ட முறையில் தன்மையாக எடுத்து சொல்லும்போது அவர்களுக்குள் நம்பிக்கை, மரியாதை அதிகமாகும். எல்லோர் முன்பும் பகிரங்கமாக திட்டுவதால் குழந்தையின் உணர்வுகள் பாதிக்கப்படும். பெற்றோருடனான உறவும் மோசமடையும்.
உடன்பிறப்புகளுடன் மோதல்:
குழந்தைகள் உடன்பிறந்தவர்களோடு சண்டையிட்டால் அப்போது பெற்றோர் அதனை கவனமாக கையாள வேண்டும். பெற்றோர் குழந்தைகளை ஆக்ரோஷமாக திட்டுவதால் குழந்தைகளுக்கு இடையேயான மோதல் அதிகமாகலாம். அவர்களுடைய கோப உணர்ச்சி கட்டுக்குள் வராமல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சகோதர அல்லது சகோதரி பிணைப்பு பாதிப்புக்கு உள்ளாகும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவது போல அவர்கள் உணர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். ஆகவே குழந்தைகள் உடன்பிறப்புகளோடு சண்டையிடும் போது பெற்றோர் அமைதியாக இருக்க வேண்டும் அவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டையை சாதுரியமாக தீர்ப்பதற்கான விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் ஒருவருக்கொருவர் பச்சாதாபத்தை ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களுக்குள் ஆரோக்கியமான உரையாடல்களை எடுத்துக்காட்டாக சொல்லி தெளிவான எல்லைகளை வகுக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடைய உடன்பிறப்புகளுடன் சுதந்திரமாகச் சண்டையிட்டு அதனை சுமுகமாக தீர்க்க பாதுகாப்பான சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும்.
சின்ன குழந்தைகளை திட்டலாமா?
ஒன்று முதல் 3 வயது குழந்தைகளை திட்டுவது தவறான செயல். இந்த காலகட்டத்தில், குழந்தைகள் எல்லா வார்த்தையையும், உணர்ச்சியையும் அப்படியே உள்வாங்குவார்கள். உங்களுடைய ஆக்ரோஷமான தொனி குழந்தைகளுக்கு பயம், பதட்டம், அவநம்பிக்கையை உண்டாக்கலாம். மென்மையாக பேசுவது, பொறுமை, நேர்மறையான விஷயங்கள் இளம் வயதில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர வைக்கும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. உங்க டீன் ஏஜ் மகனிடம் நெருக்கமாக பழக சூப்பர் டிப்ஸ் இதோ!!
குழந்தைகளை எதையாவது உடைத்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் எதையாவது கீழே கொட்டினால் அல்லது உடைத்தால் உடனே கத்துவதோ, திட்டுவதோ தவறு. இப்படி செய்வதால் அவர்களுக்கு பயமும், பதட்டமும் ஏற்படும். இதனால் இளம் வயதில் மன உளைச்சல் ஏற்படும். குழந்தைகளிடம் சத்தமாக கத்துவது அவர்களையும் ஆக்ரோஷமான நடத்தையை செய்ய பழக்கிவிடும். ஆகவே நிதானமாக பேச வேண்டும். கீழே கொட்டினால், அது சகஜமானது என புரிய வைத்து அவர்களையும் உங்களுடன் இணைந்து சுத்தம் செய்ய பழக்குங்கள். இதனால் அவர்களுக்கு பொறுப்பு, பச்சாதாபம், சிக்கல்களை தீர்க்கும் திறன் மேம்படும்.
விரக்தியில் கத்துதல்:
அழும் குழந்தைகளை திட்டுவது அவர்களுடைய துயரத்தை மேலும் அதிகமாக்கும். குழந்தைகளின் உணர்வை புரிந்து கொள்வதற்கு பதிலாக, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் அவர்களுடைய கவலை, பயம் அதிகமாகும். இதனால் குழந்தைகளின் நம்பிக்கை, சுயமரியாதை, வெளிப்படைத்தன்மை பாதிப்படையும். குழந்தைகளிடம் மென்மையான தொனியில் பேசுவது, உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் பாதுகாப்பான உணர்வை வளர்க்கும்.
இதையும் படிங்க: உங்க மகளுக்கு 10 வயசு ஆச்சா? அப்ப இந்த '6' விஷயங்களை கண்டிப்பா சொல்லி கொடுங்க!