Rice Cooker: குக்கரில் சாதம் சரியாக வேகாமல் விரைப்பாக இருந்தால், அதை கீழே கொட்ட வேண்டாம். சாதம் பஞ்சு போல் வேக வைப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சமையலறையில் இந்த பிரச்சனை எல்லோருக்குமே வந்திருக்கும். குக்கர் அல்லது பானையில் சாதம் வைக்கும்போது சில நேரங்களில் சரியாக வேகாது. சாப்பிடும்போது நறநறவென்று இருந்தால் ரொம்பவே எரிச்சலாக இருக்கும். உடனே பலரும் அந்த அரைவேக்காட்டு சாதத்தை குப்பையில் கொட்டிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் யோசித்தால் வெறும் 5 நிமிடத்தில் இந்த விரைப்பான சாதத்தை சரிசெய்துவிடலாம். சாதத்தை கொட்டிவிட்டு புதிதாக வடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்.
24
சாதம் சரியாக வேகவில்லை என்றால் என்ன செய்வது?
குக்கரில் சாதம் விரைப்பாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேகவைக்கலாம். ஆனால், நீங்கள் எந்த பாத்திரத்தில் சமைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும். குக்கரில் 2 டம்ளர் அரிசி போட்டால், பொதுவாக மூன்றரை முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் வைக்க வேண்டும். அதேசமயம், பானையில் சாதம் வடிக்கும்போது, அப்பப்போ ஓரிரு பருக்கைகளை எடுத்து நசுக்கிப் பார்க்க வேண்டும்.
அரிசி விரைப்பாக இருந்தால் சாதம் இன்னும் வேகவில்லை என்று அர்த்தம். சில நேரங்களில் பானையின் மேல் பகுதியில் உள்ள சாதம் வெந்திருக்கும், ஆனால் நடுவிலோ அல்லது அடியிலோ உள்ள சாதம் வேகாமல் இருக்கும். இதற்காக மொத்த சாதத்தையும் கீழே கொட்ட வேண்டியதில்லை. கொஞ்சம் தண்ணீர் தெளித்து மீண்டும் லேசாக சூடுபடுத்தினாலே சாதம் நன்றாக வெந்துவிடும்.
34
ஒரேடியாக தண்ணீர் ஊற்ற வேண்டாம்
பானையில் தண்ணீர் வற்றிய பிறகும் அரிசி வேகாமல் இருந்தால், முதலில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள். அரிசி எவ்வளவு விரைப்பாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப தண்ணீரின் அளவை முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஒரேயடியாக நிறைய தண்ணீர் ஊற்றிவிடக் கூடாது. தண்ணீர் அதிகமானால் சாதம் குழைந்து கூழாகிவிடும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிய பிறகு, பாத்திரத்தை நன்றாக மூடி வையுங்கள்.
தண்ணீர் ஊற்றிய பிறகு, கேஸை சிம்மில் (குறைந்த தீயில்) வைத்து சில நிமிடங்கள் வேகவைக்கவும். பாத்திரத்தை மூடி வைத்தால் உள்ளே நிறைய நீராவி உருவாகும். இந்த நீராவிதான் வேகாத அரிசியை மென்மையாக்க உதவும். இந்த நேரத்தில் அடிக்கடி மூடியை திறக்கக் கூடாது. மூடியை திறந்தால் உள்ளே இருக்கும் நீராவி வெளியேறிவிடும், சாதம் வேக இன்னும் அதிக நேரம் எடுக்கும். சில நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து சாதம் வெந்துவிட்டதா என செக் செய்து பார்க்கலாம்.
சாதம் வெந்தவுடனேயே அவசர அவசரமாக பரிமாற வேண்டாம். கேஸை ஆஃப் செய்த பிறகு, குறைந்தது 5 முதல் 10 நிமிடம் வரை பாத்திரத்தை மூடியே வையுங்கள். பானைக்குள் இருக்கும் மீதமுள்ள நீராவியிலேயே சாதம் இன்னும் மென்மையாக, உதிரி உதிரியாக மாறிவிடும். அதன்பிறகு கரண்டியால் சாதத்தை எடுத்து பரிமாறலாம்.
நீங்கள் மைக்ரோவேவ் ஓவனில் சாதம் சமைத்து, அது வேகாமல் இருந்தால், அந்த சாதத்தை ஒரு மைக்ரோவேவ்-சேஃப் பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். அதன் மேல் சில ஸ்பூன் தண்ணீர் தெளித்துவிடுங்கள். பிறகு, மைக்ரோவேவ்-சேஃப் மூடியால் பாத்திரத்தை மூடி வையுங்கள். நடுநடுவே வெளியே எடுத்து சாதம் வெந்துவிட்டதா என செக் செய்து கொள்ளுங்கள். சாதம் முழுமையாக வேகும் வரை இதே முறையை ஃபாலோ செய்யலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.