
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உறவினர்கள் தவிர்க்க முடியாதவர்கள் மகிழ்ச்சியான மற்றும் சோகமான நேரங்களில் அன்பையும் ஆதரவையும் வழங்க உறவினர்கள் உடன் இருப்பார்கள். ஆனால் உங்களுடைய எல்லா சொந்தக்காரர்களும் உங்களுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருவதில்லை. சிலர் எதிர்மறையான எண்ணங்களையும், வருத்தத்தையும் தரக்கூடியவர்கள். இவர்கள் உங்களுடைய மகிழ்ச்சியை கூட பாழாக்கக் கூடியவர்கள். துன்பமில்லாத, அமைதியான நிம்மதியான வாழ்க்கையை நீங்கள் வாழ உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் உறவினர்களை தள்ளி வைக்க வேண்டும். அவர்களை எப்படி மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான எல்லைகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
எதிர்மறை எண்ணங்கள்!!
உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களை தூண்டும் உறவினர்களை தள்ளி வைக்க வேண்டும். சிலர் எப்போதும் உங்களுடைய எல்லா விஷயங்களையும் எதிர்மறை கண்ணோட்டத்துடன் காண்பார்கள். உங்களுடைய சொந்த முடிவுகள், வெற்றிகள், சந்தோஷம் எதைக் குறித்து நீங்கள் பகிர்ந்து கொண்டாலும் எதிர்மறையான எண்ணங்களை மட்டுமே உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். இந்த எதிர்மறையான உரையாடல்கள் உங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைக்கலாம். இது மன ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்து நிம்மதியை கெடுக்கும். உங்களுடைய அனைத்து தருணங்களிலும் எதிர்மறையாக மட்டும் பேசுபவர்கள் உங்களை குறை கூறுபவர்களை எப்போதும் விலக்கி வைப்பது நல்லது.
பொறாமை:
உங்களுடைய வெற்றிகள் மீது சில உறவினர்கள் பொறாமை கொள்வார்கள். ரகசியமாக அவர்கள் பொறாமைப்படுவது சிறுநடவடிக்கைகளில் தெரியும். அவர்கள் உண்மையில் உங்களை நினைத்து சந்தோஷம் அடையாமல் இருந்தால் உங்களுடைய வெற்றியை பெரிதாக கருதமாட்டார்கள். உங்களை குறைவாக மதிப்பிடுவார்கள். இதை நீங்கள் கவனித்தால் அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய விஷயங்களை செய்து முடித்தாலும் அதை குறைவாகவே மதிப்பிட்டு பேசுவார்கள். உதாரணமாக,' ஓ! இதான் நானே பண்ணுவனே.. இது பெரிய விஷயமா?' இதுமாதிரி உங்கள் வெற்றியை கூட குறுக்கிவிடுவார்கள்.
இதையும் படிங்க: உங்க பார்ட்னருக்கு 'இந்த' விஷயத்தை கொடுக்கலன்னா.. உறவு சீக்கிரமே 'வீக்' ஆகிடும்!!
உங்களை 'பயன்படுத்தி' கொள்வார்கள்!
உங்களுடைய தாராள குணம் அறிந்து அதனை சில உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். வெறும் உதவிக்காக, உணவு அல்லது பொருள்கள் போன்ற தேவைகளுக்காக மட்டும் உங்களிடம் பேசுவது கவனிக்க வேண்டிய விஷயம். உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவாமல், உங்களுடைய தேவைகளை குறித்து சிந்திக்காமல் அவர்களுக்கான விஷயங்களை மட்டும் உங்களிடம் இருந்து பெறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களிடம் ஆரோக்கியமான தூரத்தை கடைபிடிப்பது உங்களுடைய மன நலனுக்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது. இந்த மாதிரி உறவினர்களிடம் அவ்வப்போது 'இல்லை' என்று சொல்வதை கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து உங்களை சுரண்டி அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
சுயபித்துள்ளவர்கள்:
தங்களையே புகழ்ந்து தங்களை பற்றி மட்டும் ஆர்வமா இருக்கும் நாசீசிஸ்டு உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பிறர் மீது பச்சாதாபம் கொள்ளாத இது மாதிரியான தனிநபர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். இவர்கள் பிறரின் உணர்வுகள், தேவைகளுக்கு மதிப்பளிக்கவேமாட்டார்கள். அவர்களுடைய உரையாடல்கள் ஒருதலைப்பட்சமானது. அவர்களின் சுயநலப் போக்கு உங்களை உணர்ச்சிரீதியாக பாதிக்கும். மனச்சோர்வை ஏற்படுத்தலாம். இந்த உறவினர்களுடன் அளவாக உறவாடுங்கள். நெருக்கமாகவேண்டாம்.
இதையும் படிங்க: உங்களுக்கு ஏற்ற 'வாழ்க்கைத் துணையை' எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா?
விமர்சனம் மட்டும் செய்யும் உறவினர்கள்:
ஒருவரின் முன்னேற்றத்திற்கு உதவும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவை. ஆனால் அக்கறை இல்லாமல் வெறுமனே உங்களை தொடர்ந்து விமர்சிக்கும் உறவினர்களை கொஞ்சம் விலக்கி வைப்பது நல்லது. அவர்கள் உங்களை தாழ்த்தி பேசுவது, உங்களுடைய குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவது என எதிர்மறையாக மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். உங்களுடைய பலத்தை குறித்து பேச மாட்டார்கள். அவர்களுடைய விமர்சனம் உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை மட்டுமே கொடுத்து உங்களுடைய சுயமரியாதையை கேள்விக்குள்ளாகும். உங்களுடைய ஆரோக்கியமான மனநலனுக்கு இந்த மாதிரி உறவுகளிடம் கொஞ்சம் கவனமாகவும், தூரமாகவும் இருப்பது நல்லது. குடும்பம் என்பது எல்லா உறவினர்களும் சேர்ந்தது தான். ஆனால் சிலர் உங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து எதிர்மறையான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தக் கூடியவர்கள். அவர்கள் உறவினராகவே இருந்தாலும் கூட ஆரோக்கியமான தூரத்தை கடைபிடிப்பது உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது.