வீடுகளில் கேஸ் அடுப்புகளில் படிந்து இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை கோதுமை மாவு கொண்டு எப்படி பளபளப்பாக மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் ஸ்டவ்வில் எண்ணை பிசுக்குகள், உணவு கறைகள், பால் பொங்கி வருதல் போன்ற காரணங்களால் அடுப்பு அழுக்காக காணப்படுகிறது. இந்த அழுக்குகளை சுத்தம் செய்வது இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. பலரும் அடுப்பை கை வலிக்க தேய்த்து கழுவுவதுண்டு. ஆனால் இனி இதுபோல செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அடுப்பை ஐந்து நிமிடங்களில் சுத்தம் செய்து விடலாம். அது குறித்த எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
25
கோதுமை மாவு கொண்டு சுத்தம் செய்யும் முறை
அடுப்பை சுத்தம் செய்வதற்கு முன்னர் பர்னர்களை அகற்றி விட வேண்டும். ஸ்டவ் மீது கோதுமை மாவு அல்லது மைதா மாவு தூவி விட வேண்டும். பின்னர் ஒரு மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு மாவை மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். இதன் காரணமாக ஸ்டவ்வில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் வெளியேற துவங்கும். இது முதல் நிலை சுத்தமாகும். பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தூள் உப்பை எடுத்து அதனுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படும் டிஷ்வாஷ் லிக்யூட் கொஞ்சம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை எலுமிச்சை பழத் தோலை தொட்டு ஸ்டவ் முழுவதும் நன்றாக தேய்க்க வேண்டும்.
35
கடினமான கறைகளாக இருந்தால்
சில சமயங்களில் ஸ்டவ் துரு பிடித்து இருந்தாலும் அல்லது கடினமான கறைகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டவை பலனளிக்காது. அதற்கு ஈனோ மற்றும் எலுமிச்சை சாறு சிறந்த பலனளிக்கும். ஒரு கிண்ணத்தில் ஈனோவை சேர்த்துக் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இவை இரண்டும் வினைபுரிந்து நுரை வெளிவரும். இதை கறைகளில் உள்ள இடங்களில் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவினால் கடினமான கறைகள் எளிதில் நீங்கி விடும். வாரம் ஒரு முறை இதுபோல சுத்தம் செய்து வந்தால் கடினமான கறைகள் ஏற்படுவது தடுக்கப்படும். கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்வதால் உங்கள் சமையலறை மிகுந்த நறுமணத்துடன் இருக்கும். கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பூச்சிகளும் சமையலறைக்குள் எட்டிப் பார்க்காது. வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த முறையில் அடுப்பை சுத்தம் செய்யலாம். தினமும் சுத்தம் செய்ய விரும்புபவர்கள் இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு ஸ்டவ் மீது ஸ்பிரே செய்து துடைக்கலாம். கண்ணாடி அடுப்பு வைத்திருப்பவர்கள் சுத்தம் செய்த பிறகு சிறிதளவு விபூதியை தூவி பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி கொண்டு தேய்த்தால் அடுப்பு புதியது போல மின்னும். இந்த எளிய வழிகளை பின்பற்றி ஸ்டவ்வை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.
55
பர்னரை சுத்தம் செய்யும் முறை
பர்னரை சுத்தம் செய்ய விரும்புபவர்கள் கை பொறுக்கும் அளவிற்கு சூடு உள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாறு பாத்திரம் தேய்க்கும் டிஷ்வாஷ் லிக்யூட் ஆகியவற்றை சேர்த்து பர்னர்களை அரை மணி நேரம் போட்டு வைத்து பின்னர் கழுவினால் சுத்தமாகிவிடும். அடைப்பு இருப்பதாக தெரிந்தால் சிறிய குண்டூசி அல்லது ஊக்கு கொண்டு பர்னர் ஓட்டைகளை குத்தி விட வேண்டும். இதனால் அடுப்பு வேகமாக எரிவதுடன் கேஸ் செலவாகும் மிச்சமாகும்.