
ஒரு வீட்டின் சுத்தம் என்பது அதை அலங்காரமாக வைத்துக் கொள்வது மட்டும் கிடையாது. வீட்டை எவ்வளவு அழகாக நாம் வைத்திருந்தாலும் நம்முடைய கழிவறை, குளியலறை சுத்தமாக இல்லாவிட்டால் மொத்தமும் வீண். ஏனென்றால் நம்முடைய கழிவறையும் குளியல் அறையும் தான் நாம் சுகாதாரமாக இருப்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
வீட்டிற்கு விருந்தினர் வரும்போது கழிவறை தான் நாம் எவ்வளவு சுத்தமானவர்களாக இருக்கிறோம் என்பதை காட்டும். ஒருவேளை உங்களுடைய கழிவறையின் சுவர்களோ, குளியலறையின் சுவர்களோ அசுத்தமாக இருந்தால் அவர்களுக்கு உங்கள் வீட்டில் தங்கவே மனம் வராது.
விருந்தினர்களின் மனம் கவர்வதற்காக நாம் வீட்டை சுத்தமாக வைக்க அவசியம் இல்லை தான். ஆனால் நமக்கு நம் வீட்டைப் பிடிப்பதற்கு அது கொஞ்சம் நேர்த்தியாக இருப்பது அவசியம். நம் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் கிருமி தொற்றுகளிடமிருந்து தப்பலாம். இல்லையென்றால் சரும நோய்கள் உங்களை தாக்கக் கூடும். இதை தவிர்க்க வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும்.
வீட்டை சுத்தம் செய்வது எல்லோருக்கும் எளிமையான காரியம் அல்ல. சிலருக்கு சின்ன வேலைகளை செய்யவே சலிப்பாக இருக்கும். சோம்பேறித்தனத்தால் வீட்டை சுத்தம் செய்யாமல் இருப்பவர்கள உண்டு. ஆனால் எளிய வழிமுறைகளால் வீட்டை சுத்தம் செய்து பழகிவிட்டால் இந்த பிரச்சனையே இருக்காது.
பாத்ரூம் சுவரை சுத்தம் செய்ய ரொம்ப நேரம் எடுக்கும். உப்பு தண்ணீர், அழுக்கு என அலங்கோலமாக இருக்கும் சுவரை சில நிமிடங்களில் சுத்தம் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் செய்ய முடியும். இதை செய்ய அதிகம் கூட செலவாகாது. ரொம்ப குறைவான செலவில் அதுவும் 10 ரூபாயில் முடியும் வேலை. இரண்டு ஈனோ (ENO) பாக்கெட்டுகள் இருந்தால் 10 நிமிடத்திற்குள் பாத்ரூம் கண்ணாடி பளபளவென மாறிவிடும்.
இதையும் படிங்க: இனி கை வலிக்காமல் டாய்லெட்டை ஈசியா சுத்தம் செய்யலாம்!!
ஈனோ ஒரு ஆன்டாசிட். இதனை நெஞ்செரிச்சல், அஜீரணம் ஆகியவற்றை குறைக்க பயன்படுத்துவார்கள். இது வயிற்றில் உள்ள இரைப்பை அமிலத்தை நடுநிலையாக்க உதவும். இப்போதும் கூட மக்கள் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதை கொண்டு வயிற்றை மட்டும் அல்ல; கழிவறை, குளியலறைகளை கூட சுத்தம் செய்யும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.
ஈனோ வீட்டின் தரையை சுத்தம் செய்வதிலும், விடாப்பிடியான கறைகளை அகற்றுவதிலும் சிறந்து செயலாற்றும். துர்நாற்றங்களை நீக்கவும் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமல்ல கிரைண்டர், மிக்ஸி போன்ற மின்சாதனங்கள், குழாய்கள் உள்ள படிவுகளை நீக்கவும் ஈனோ (ENO) உதவுகிறது. அதை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: குளியலறையில் முடி மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்கிறதா? இவற்றை பயன்படுத்துங்க.!!
குளியலறையை சுத்தம்:
குளியலறையில் கடின நீரால் படிந்துள்ள கறை, சோப்பு கறை, அழுக்கு, பூஞ்சை போன்றவற்றை நீக்க ஈனோ உதவுகிறது. இதற்கு முதலில் குளியலறை அல்லது கழிவறை சுவற்றை தண்ணீர் இல்லாமல் உலர்ந்தபடி வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது டப்பாவில் தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள். அதனுடன் கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதில் எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட வேண்டும். பின்னர் இரண்டு ஈனோ பாக்கெட்டுகளில் உள்ள தூளை அதனுள் சேர்க்க வேண்டும். இத்துடன் சிறிதளவு பேக்கிங் சோடா, விம் அல்லது ஏதேனும் சோப்பு கரைசலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதனை சுவற்றில் ஊற்றி நன்கு தேய்த்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும்போது கைகளில் பாலிதீன் கவர் அல்லது கையுறை அணிந்து கொள்ள வேண்டும். வெறும் கையால் செய்யக் கூடாது. இந்த கரைசலை நன்கு தேய்த்தால் சுவற்றில் உள்ள அழுக்கு அப்படியே நீங்கிவிடும். நீங்களே நம்ப முடியாத அளவுக்கு கழிவறை சுவர் பளபளவென இருக்கும்.
ஈனோவின் மற்ற பயன்கள்:
கழிவறை குளியலறை மட்டுமில்லாது சமையலறையை சுத்தம் செய்ய கூட ஈனோவை பயன்படுத்தலாம். சிங்குகள், பாத்திரம் வைக்கும் இடம் போன்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கடினமான கறையும், துர்நாற்றங்களையும் நீக்கும். போர்வை, கார்பெட் போன்ற தரைவிரிப்புகளில் காணப்படும் கறை, துர்நாற்றங்களை அறவே நீக்குகிறது. ஈனோவை கொண்டு பூச்சிகளை கூட கட்டுப்படுத்த முடியும். இரவில் எறும்புகள், பிற பூச்சிகளை விரட்ட ஈனோ உதவும்.
தோட்டத்தில் ஈனோவை பயன்படுத்துபோது அந்த மண்ணின் பிஎச் (pH) நடுநிலையாக்கப்படுகிறது. இதனால் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
தற்காப்பு நடவடிக்கைகள்:
1. பயன்பாட்டிற்கான வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும்.
2. சுத்தம் செய்யும் போது கையுறைகள் அணியுங்கள். கண்களுக்கு பாதுகாப்பு காரணமாக கண்ணாடிகளையும் அணிய வேண்டும்.
3. ஈனோ (ENO) தூளை சுவாசிக்கக் கூடாது. அதனால் முகக்கவசம் அணியவும்.
ஈனோவால் எதையெல்லாம் சுத்தம் செய்யலாம்?
1. கண்ணாடிகள்
2. வண்ணம் பூசப்பட்ட சுவர்கள்
3. கண்ணாடி பாட்டில்கள், தட்டுகள்
எதன் மீது ஈனோவை பயன்படுத்தக் கூடாது?
கிரானைட் தரைகளில் ஈனோவை பயன்படுத்தக் கூடாது. அலுமினியம் அல்லது குரோம் போன்றவற்றில் ஈனோவை தவிர்க்க வேண்டும். பீங்கான் அல்லது உணர்திறன் அதிகமுள்ள மேற்பரப்புகளில் பயன்படுத்தக் கூடாது.
மேலே சொன்னபடி, ஈனோவை பயன்படுத்த முடியாதவர்கள் பேக்கிங் சோடா, தண்ணீர் ஆகியவற்றை கலந்து பேஸ்ட்டாக செய்து அதனை கொண்டு சுவரை சுத்தம் செய்யலாம். வெள்ளை வினிகருடன் தண்ணீர் கலந்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.
நினைவில் கொள்க:
குளியலறையை அன்றாடம் சுத்தம் செய்வது அழுக்கு படிவதை தடுக்கிறது. வெறும் கைகளால் ஈனோ கரைசலை பயன்படுத்த வேண்டாம். கையுறை அணிந்து ஸ்க்ரப் பயன்படுத்துங்கள். ஈனோ கரைசலை முதலில் கொஞ்சமாக பயன்படுத்தி சோதிக்கவும். பின்னர் எல்லா இடங்களிலும் தெளித்து சுத்தம் செய்யுங்கள்.