
மஹாலய அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் ஆரம்பமாகி தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் 9 நாட்களும் வீடுகளில் பலவிதமான கொலு பொம்மைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். நவராத்திரி என்றால் என்ன? கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கொலு பொம்மையை எப்படி வைப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி என்றால், அம்பிகையை வழிபடுவதற்கு நவராத்திரி உகந்த நாட்களாக அறியப்படுகிறது. நவம் என்றால் 9 என்று பொருள். அம்மனை 9 ராத்திரிகள் வழிபடுவதால் இந்த விழாவிற்கு நவராத்திரி என்று பெயர். மலைமகள், அலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியராகிய அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்ய 9 நாட்கள் தவம் இருந்ததால் தான் இந்த நவராத்திரியை 9 நாட்களுக்கு கொண்டாடுகிறோம்.
முப்பெரும் தேவியராகிய மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரும் தவம் இருந்து ஒரே ரூபத்தில் மகிஷாசுரனை வதம் செய்ததாக புராணம் கூறுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாவை வீட்டில் 3, 5, 7, 9, 11 படிகள் வரை கொலு வைத்து மக்கள் நவராத்திரியை கொண்டாடுகின்றனர். கொலு வைப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் கொலுவில் படிகள் உயர உயர நமது வாழ்க்கையும் உயரும் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது.
எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகள்?
தமிழ் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்று ஓரறிவு, ஈரறிவு, மூன்று அறிவு என உயிரினங்களின் அறிவுக்கு ஏற்ப முதல் படியில் இருந்து பொம்மைகள் இடம் பெற வேண்டும். முதல் படியில் ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடீ உள்ளிட்டவை முதல் படியிலும் இரண்டாவது படியில் நத்தை, சங்கு உள்ளிட்டவை இரண்டாவது படியிலும் வைக்க வேண்டும்.
கரையான் உள்ளிட்ட உள்ளிட்ட மூன்று அறிவு உயிரினங்கள் மூன்றாவது படியில் இடம் பெறவேண்டும். நண்டு உள்ளிட்ட 4 அறிவு ஜீவன்கள் 4வது படியில் இடம்பெற வேண்டும். பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட 5 அறிவு கொண்ட உயிரினங்கள் 5வது படியிலும், 6 அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை 7வது படியிலும் வைக்க வேண்டும்.
ஏழாவது படியில் மனிதர்களாக வாழ்ந்து மகான்களாகவும், ஞானிகளாகவும் உயர்ந்தவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். அதன்படி ஏழாவது படியில் சுவாமி விவேகானந்தர், வள்ளலார் உள்ளிட்டவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
எட்டாவது படியில் அவதாரங்களைக் குறிப்பிடும் பொம்மைகளை வைக்க வேண்டும். அந்த வகையில், தசாவதாரம், அஷ்டலட்சுமி அவதார பொம்மைகளை வைக்கலாம். 9வது படியில் முப்பெரும் தேவியரின் உருவங்கள், மும்மூர்த்திகள் மற்றும் பூரண கலசத்தை வைத்து வழிபடலாம். இவ்வாறு 9 நாட்களும் கொலு வைத்து விரதம் இருந்து அம்பாளை வழிபட்டால் முப்பெரும் தேவியரின் அருள் கிடைக்கும் என்றும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் பெருகும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்று நம்பப்படுகிறது.