
இன்றைய காலகட்டத்தில் தலைவலி பலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மன அழுத்தம் சரியான நேரத்திற்கு சாப்பிடாதது உடலில் நீர் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அடிக்கடி தலைவலி, காய்ச்சல் ஏற்படுவது நம் உடலில் மிகப்பெரிய பாதிப்பு இருப்பதன் அறிகுறி என்பதை பலர் அறிவதில்லை. இதை தொடர்ச்சியாக அலட்சியம் செய்யும் சிலர் உயிரிழப்பு போன்ற ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும் மூளைக் கட்டி நோய் ஆபத்து குறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். இந்நோயால் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது.
நான்காண்டுகளுக்கு முன்னர் மூளைக் கட்டி, புற்றுநோய் ஆகியவற்றால் 2.46 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு மூளையில் கட்டி வந்தால் அது குறித்து பல ஆண்டுகளுக்கு அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளையில் வரும் கட்டி ரொம்ப மெதுவாக தான் உருவாகும். இதனால் அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. இந்த மாதிரியான நேரத்தில் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு கவனம் கொடுக்க வேண்டும். அதில் முக்கியமான அறிகுறிதான் தலைவலியாகும். உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும்போது அதை அலட்சிய படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இதையும் படிங்க: மொபைல் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா? WHO ஆய்வில் புதிய தகவல்!
மூளைக் கட்டி குறித்த தகவல்கள்: மூளையில் கட்டி வந்தாலோ அல்லது அதைச் சுற்றி காணப்படும் செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடற்று இருந்தாலோ அதை மூளைக் கட்டி என்கிறார்கள். இப்படி வருவது புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம். ஒரு ஆய்வில், மூளையில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட கட்டிகள் வரக்கூடும் என தெரியவந்துள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மூளைக் கட்டி ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி இரசாயன தொழிலில் உள்ளவர்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது.
இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி மற்றும் உணர்வின்மை..இது மூளை கட்டியின் எச்சரிக்கை அறிகுறிகள்!
மூளைக் கட்டி இருப்பவர்களின் தலைவலியை எப்படி வித்தியாசப்படுத்தலாம்?
மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு காலையில் தலைவலியும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். அது மட்டுமின்றி இவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். இது மாதிரி எந்த காரணங்களும் இன்றி அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
மற்ற அறிகுறிகள்:
1). குமட்டல் உணர்வு அல்லது வாந்தி உணர்வு
2). மங்கிய பார்வை, இரட்டை பார்வை உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சனைகள்
3). கைகள் அல்லது கால்களில் இயக்கம் இழக்கலாம்
4). பேசுவதில் சிரமம்
5). மறதி, நினைவாற்றல் பிரச்சினைகள்
6). அடிக்கடி தலைசுற்றல் இருக்கும். இது இல்லாமல் உலகம் சுழலும் உணர்வு வரலாம்.
மூளைக் கட்டி நோயின் அறிகுறிகள் அந்தக் கட்டியின் அளவையும், அது காணப்படும் இடத்தையும் பொறுத்து மாறலாம். மூளைக் கட்டியின் வளர்ச்சிக்கு தகுந்தவாறு அறிகுறிகள் மாறலாம். தலைவலி என்பது ஆரம்ப கட்ட அறிகுறியாகும்.
மூளைக் கட்டி வந்தாலே அதை புற்றுநோய் என சொல்லிவிட முடியாது. அந்த நோய் தீவிரமடைவதை பொறுத்து அந்த ஆபத்து மாறலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது நோய் தாக்கத்தை குறைக்கும். ஏற்கனவே முதியவராக இருந்தால், உடல் பருமன் அல்லது அதிக அளவில் ரசாயனங்களுடன் புழங்கியவராக இருந்தால் இந்நோய்க்கு அதிகம் கவனம் கொடுக்கவேண்டும். இந்த நோயை முன்கூட்டி கண்டறிவதால் விரைவில் குணப்படுத்தலாம்.