Good Parenting: உங்க குழந்தை ரொம்ப பயந்த சுபாவமா? மற்றவரிடம் பழக தயங்கும் குணத்தை மாற்றும் டிப்ஸ்

First Published Jan 5, 2023, 3:26 PM IST

நமது 5 விரங்களும் எப்படி ஒரே மாதிரியாக இருப்பதில்லையோ அதைப் போலவே எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு குழந்தைகளும் சில தனித்துவமான பண்புநலன்களை கொண்டுள்ளனர். 

குழந்தைகள் நமக்கு கிடைத்த கொடை. ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் குறித்து சில அபிப்ராயங்கள் இருக்கும். குழந்தைகள் பொய் சொல்லமாட்டார்கள், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள், கள்ளங்கபடமற்ற சிரிப்பு என குழந்தைகள் என்றாலே பல எண்ணங்கள் மனதில் எழும். சில குழந்தைகள் எல்லாரிடமும் சேர்ந்து விளையாடவும், சில குழந்தைகள் பயமில்லாமல் எல்லா சாகசங்களையும் செய்யவும் ஆசைபடுவர். இதற்கு மாறாக சில குழந்தைகள் வெட்கத்துடன் தனித்து காணப்படுவர். இந்த குழந்தைகள் வெளியில் செல்லவோ, மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியவோ விரும்புவதில்லையாம்.

எப்போதும் ஹீரோவாக இல்லாமல் பத்தோடு பதினொன்றாக இருக்க விரும்பும் குழந்தைகளும் உள்ளனர். எல்லாரும் ஹீரோவாக இருக்கவேண்டும் என்ற கதாநாயக மனப்பான்மைதான் குழந்தைகளிடம் நமக்கு அந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்குகிறது. குழந்தைகளை அவர்களுக்கான குணநலன்களோடு புரிந்துகொண்டு அவர்களை பார்த்து கொள்வதே பெற்றோரின் கடமை. வெட்கத்துடன் காணப்படும் குழந்தைகளை வளர்க்க சில குறிப்புகளை இங்கு காணலாம். 

வெட்கப்படும் குழந்தைகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு பெற கூட தயங்கலாம். அது சக மாணவர்களுடன் பழகுவதை குறைத்து விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் வளர்ச்சிய அடையாமல் தேங்க வைக்கலாம். அலுவலகத்தில் கூடுதல் சுமையை அனுபவிக்க நேரிடலாம். அதனால் குழந்தைகளை வளரும் பருவத்திலே எச்சரிக்க வேண்டும். 

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்! 

வெட்கம் அதிகம் கொண்ட அல்லது பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளிடம் அடிக்கடி அதை குறித்து சொல்லி காட்டாதீர்கள். அப்படி சொல்வதால் அது அவர்கள் வாழ்நாள் முழுக்க தொடரலாம். என் பிள்ளை பேசவே பேசாது, என் மகள் வெளியே போய் பழகமாட்டாள், இவன் பயந்துக்கிட்டு தான் இருப்பான் போன்ற விஷயங்களை சொல்வதை நிறுத்துங்கள். அதையே அவர்கள் பின்பற்ற தொடங்கலாம். வீட்டிற்கு வருபவர்களுடன் குழந்தைகள் பேச தயங்கினால் அவர்களுக்கு உதவுங்கள்.

உறவினர்களுடன் பேசவில்லை என்பதால் குழந்தைகளை திட்டாதீர்கள். நீங்களே உரையாடலை தொடக்கி வையுங்கள். குழந்தைகள் சொல்ல வருவதை காது கொடுத்து கேளுங்கள். நீங்களாகவே அவர்களைக் குறித்து முடிவு செய்யாதீர்கள். நீங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாவிட்டால் அவர்கள் பயந்த சுபாவத்துடனும், பழகுவதற்கு வெட்கப்படும் குழந்தைகளாகவும் வளர வாய்ப்புள்ளது. 

விழாக்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தாதீர்கள்! 

திருமணம், பார்ட்டி ஆகிய விழாக்களில் கலந்து கொள்ள தயங்கும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த சூழலுக்கு பழகும் வரை பொறுமையுடன் இருப்பது அவசியம். குழந்தைகளின் மாற்றம் ஏற்படும் வரை காத்திருப்பது அவசியம். விழாக்களில் இருக்கும் கொண்டாட்டங்கள் குறித்து கூறி ஆர்வமூட்டுங்கள். வெட்கப்பட்டு கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு எப்போதும் 'மற்றவர்களை போல செய்யும்' இருக்கும். அவர்கள் புறவெளியில் நடப்பதை பார்த்து கற்று கொள்வார்கள். அவர்களுக்கு நீங்கள் பயந்த சுபாவமாக இருப்பதை எப்படி கடந்து வந்தீர்கள் என்ற கதையை கூறுங்கள். நம்பிக்கையான வார்த்தைகளை பேசி உற்சாகமூட்டுங்கள். 

சமூகத்துடன் ஒன்றுதல்! 

குழந்தைகளை உறவினர்களுடனும், சக குழந்தைகளுடனும் பழக விடுங்கள். அவர்கள் தயங்கும்போது நீங்களே அதற்கான முயற்சி எடுங்கள். புரியவில்லையா? உங்கள் குழந்தையுடன் பயிலும் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களோடு விளையாட விடுங்கள். குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போதும், விளையாடும் நிறைய கற்று கொள்வார்கள். 

யாருடனும் ஒப்பிடாதீர்கள்! 

எந்த குழந்தைக்கும் சிறுவயதில் நடக்கும் சம்பவங்கள் தான் மனதில் ஆழமாக பதியும். அதனால் குழந்தைகளை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். சில நேரங்களில் பெற்றோர் உடன்பிறந்தோரையும், நண்பர்களையும் ஒப்பிட்டு குழந்தைகளிடம் பேசுகின்றனர். அது மோசமான செயல் அப்படி செய்யாதீர்கள். 

குழந்தைகளை கொண்டாடுங்கள்! 

குழந்தைகளை கொண்டாடுவது மிக முக்கியம். அவர்களின் திறமையை ஊக்கப்படுத்துவது நல்லது. வீட்டில் அவர்களை பேச செய்யும் வகையில் சொற்பொழிவை ஆற்ற உதவுங்கள். வரைவது, எழுத்து பயிற்சி ஆகியவை செய்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள். பாராட்டுகள் அவர்களை மற்றவர்கள் முன் நிற்க தைரியத்தை கொடுக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுசமூகத்துடன் கலந்துவிடுவார்கள். இந்த டிப்ஸை பயன்படுத்தி குழந்தைகளை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். குழந்தைகளை கொண்டாட மறக்காதீர்கள். 

இதையும் படிங்க; கழுத்தை நெருக்கும் கடனால் திணறுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்... உடனடி தீர்வு!

click me!