
சூரியனின் வெப்ப தாக்கத்திலிருந்து போராடி வந்த நம்மை சில்லுனு வைக்க மழைக்காலம் வரப்போகுது. மழைக்காலம் கொண்டாட்டம் என்றாலும் இது கூடவே சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்களை கூட்டிக்கொண்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
மழைக்காலத்தில் கண் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில் மழைநீர் ஆனது உங்களது கண் பார்வையை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
இதையும் படிங்க: கண்களின் கீழ் தோன்றும் வீக்கம்.. உடனே சரியாக என்ன செய்யணும் தெரியுமா?
எப்படியெனில், மழை நீரானது இயற்கையாகவே நம்முடைய கண் பார்வைக்கு எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை என்றாலும் கூட, மழைக்காலத்துடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகள் நம்முடைய கண் பார்வையை பாதிக்கக்கூடும். அதாவது, நீங்கள் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் மழைநீர் படும்போது மங்கலான பார்வை ஏற்படும். இது தவிர, மழை காலங்களில் வாகனம் ஓட்டும்போது கூட பார்வை திறனை கெடுக்குமாம். எனவே, மழைக்காலத்தில் கண் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்.
சரி இப்போது மழை நீர் எப்படியெல்லாம் கண்களை பாதிக்கிறது என்றும், மழைக்காலத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி என்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
மழைநீர் கண்பார்வையை எப்படி பாதிக்கிறது?
1. ஒவ்வாமை மற்றும் எரிச்சல் : மழை பொழியும்போது தூசி, மகரந்தம் போன்றவை கிளறப்படும். அவை காற்றின் மூலம் பரவும். இதனால் ஒவ்வாமை பிரச்சனை உள்ள நபர்களுக்கு இவை கண்களில் அரிப்பு, எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இது தற்காலிகமான பார்வையை பாதிக்கும்.
2. அசுத்தமான நீர் : சில பகுதிகளில் மழைநீரானது வளிமண்டலம் அல்லது மேற்பரப்பில் இருந்து அசுத்தங்களை சேகரிக்கலாம். அசுத்தமான நீரானது கண் தொற்றை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலங்களில் நீச்சல் அல்லது குளங்களில் விளையாடுது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் எடுப்பாடுபவர்களுக்கு இந்த பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.
3. மழைக்கால காற்று : மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எப்படியெனில் அதிக ஈரப்பதம் லென்ஸ்கள் குறைந்த வசதியை ஏற்படுத்தும். இதனால் கண்களில் வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். சில சமயங்களில் இந்த அசெளகரியம் தெளிவான பார்வையை கேடுக்கும்.
மழை காலத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?
கண்களை மூடிக்கொள்ளவும் : மழை காலத்தில் தூசி மற்றும் ஈரமான காற்றில் இருந்து உங்களது கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் எனவே தூசி மற்றும் துகள்கள் உங்கள் கண்களுக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு கண்ணாடிகளை பயன்படுத்துங்கள்.
கண்களை தொடாதே! பொதுவாகவே நம்முடைய கைகளில் பலவகையான கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி கண்களை தொடுவது அல்லது தேய்ப்பது, கண்களில் தொற்றுகள் பரவுவதற்கு வழிவகுக்கும். எனவே கண்களில் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க கண்களை அடிக்கடி தொட வேண்டாம் மற்றும் உங்கள் கைகளையும் அடிக்கடி கழுவ வேண்டும்.
சுத்தமாக வைக்கவும் : மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய ஈரப்பதம் காரணமாக பூஞ்சைகள் வளரும். நீங்கள் கண்ணாடி அல்லது கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துவீர்கள், உங்களது கண்ணாடிகளை அடிக்கடி நல்ல சுத்தமான துணியை கொண்டு சுத்தம் செய்யுங்கள். அதுபோலவே உங்களது காண்டாக்ட் லென்ஸ்களையும் திறந்தவெளியில் ஒருபோதும் வைக்க வேண்டாம். மேலும் கான்டக்ட் லென்ஸ் வைக்கும் பாக்ஸை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.
மேக்கப் போட்டால் கவனம் தேவை : மழைக்காலத்தில் கூட நீங்கள் உங்களது கண்களுக்கு மஸ்காரா, ஐ லைனர் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மழை நீர் கண்களில் பட்டால் அவை கண்களில் கலந்து ஆபத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் water proof உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்.
நீரேற்றமாக இருங்கள் : கண் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலமும் உடலில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கப்படும். பலர் மழை காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். எனவே, உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கண் சொட்டுகளை பயன்படுத்துங்கள் : மழைக்காலத்தில் மழை நீரால் கண்களில் ஒவ்வாமை, வறட்சி, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அவற்றை தவிர்க்க, மருத்துவரின் ஆலோசனைப்படி கண் சொட்டுகளை பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: இறந்த பின்னர் எத்தனை மணி நேரம் கழித்து கண் தானம் செய்யலாம்?