உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற பெருமையுடன் ஜப்பானைச் சேர்ந்த ஆடம்பர ஐஸ்கிரீம் பிராண்டான ‘செல்லாடோ’ (Cellato) அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.
ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
விதவிதமான சுவைகளிலும், நாவில் கரையும் மிருதுவான தன்மையிலும் ஐஸ்கிரீமை ருசித்துச் சாப்பிடுவதில் பலருக்கு அலாதி பிரியம் உண்டு. ஆனால், எவ்வளவுதான் ஐஸ்கிரீம் பிரியராக இருந்தாலும், ஒரேயொரு கப் ஐஸ்கிரீமிற்கு ரூ.5.2 லட்சம் கொடுக்க நீங்கள் தயாரா? நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் இது முற்றிலும் உண்மை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமின் விலை 8,73,400 ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.2 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை) ஆகும்.
24
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்
ஜப்பானைச் சேர்ந்த 'செல்லாடோ' (Cellato) என்ற ஆடம்பர ஐஸ்கிரீம் பிராண்ட் இந்த பிரத்யேக டெசர்ட்டை உருவாக்கியுள்ளது. உலக சாதனை படைக்கும் நோக்கத்துடன் மிகவும் அரிய, விலைமதிப்பற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீம், உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக 'கின்னஸ் உலக சாதனையில்' (Guinness World Records) அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது.
34
ஒரு கப் ஐஸ்கிரீம் இவ்வளவு விலையா? பின்னணி என்ன?
ஐஸ்கிரீம் இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்கு அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அபூர்வப் பொருட்களும் அதன் கைவினைத்திறனுமே காரணம். இத்தாலியின் ஆல்பா (Alba) நகரில் விளைவிக்கப்படும் உலகின் அரிய வகையான வெள்ளை ட்ரஃபிள் காளான்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் 1 கிலோ விலை மட்டுமே சுமார் 20 லட்சம் ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் பல லட்சங்கள்) ஆகும். இத்தாலிய பார்மிஜியானோ ரெஜியானோ சீஸ் (Parmigiano Reggiano) மற்றும் ஜப்பானிய பாரம்பரிய பானத்தின் தயாரிப்பு எச்சமான சாகே லீஸ் (Sake Lees) இதில் கலக்கப்பட்டுள்ளன. இந்த ஐஸ்கிரீமின் மேல் அலங்காரத்திற்காகத் தூய உண்ணக்கூடிய தங்க இழை மெல்லியதாகத் தூவப்படுகிறது.
ஒசாகாவில் உள்ள புகழ்பெற்ற 'ரிவி' (RiVi) உணவகத்தின் தலைமைக் கலைஞர் ததயோஷி யமடாவுடன் இணைந்து இந்த ரெசிபி உருவாக்கப்பட்டது. சுவையை துல்லியமாகக் கொண்டுவர ஒன்றரை ஆண்டுகள் கடும் சோதனைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கின்னஸ் உலக சாதனை விருது கிடைத்தது எங்களது 1.5 ஆண்டுகால கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று செல்லாடோ நிறுவனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த ஐஸ்கிரீமை உண்பதற்காக, கியோட்டோவின் புஷிமி பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கட்டும் பண்டைய நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த தனிப்பயன் உலோக ஸ்பூன் இதனுடன் வழங்கப்படுகிறது.
ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
இந்த ஐஸ்கிரீம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 27,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது. விலையைக் கேட்டு ஆடிப்போன இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பயனர், இந்த ஐஸ்கிரீமிற்குள் என்னதான் இருக்கிறது என்றே புரியவில்லை என்று ஆச்சரியத்துடன் பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், இனிமேல் மெக்டொனால்ட்ஸ் மெக்ஃப்ளர்ரி (McFlurry) ஐஸ்கிரீம் விலை அதிகம்னு நான் சொல்லவே மாட்டேன் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். கடவுளே, இவ்வளவு விலையா என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.