
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ல் உலக மாணவர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பன்முகத் தலைவர்:
விண்வெளி விஞ்ஞானி, கல்வியாளர், அணுசக்தி நாயகன், இளைஞர்களின் எழுச்சி நாயகன், என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் ‘பாரத ரத்னா' டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார். இவர் கடந்த 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்தார். அவரின் ஆட்சி காலம் பொற்காலமாக மக்கள் கொண்டாடினர்.
இளைஞர்களின் எழுச்சி நாயகன்:
ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம் பெரும் உறுதுணையாக விளங்கியவர். மேலும், வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கைக்கும், அவரின் எழுச்சி வார்த்தைகள் தூண்டுகோலாய் மிக சிறந்த தன் நம்பிக்கையை கொடுத்தது.
உலக மாணவர் தினம்:
தன் வாழ்வின் பெரும்பாலான பகுதியை நாட்டிற்காகவும் மாணவர்களுக்காகவும் அர்ப்பணித்த அவரின் சேவையை பாராட்டி, கடந்த 2010 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 “உலக மாணவர் தினம்” என்று அறிவித்தது . அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர்கள் தினம் அக்டோபர் 15 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஏழை குடும்பத்தில் பிறந்த டாக்டர் கலாம்:
ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த டாக்டர் கலாம், கல்வியின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும், படிப்பில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
விண்வெளி நாயகன் கலாம்
அதன் தொடர்ச்சியாகவே இந்திய விண்வெளித் துறையான ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் பணிக்குச் சேர்ந்தார். மிகச்சிறப்பாக ஐஎஸ்ஆர்ஓ-வில் பணியாற்றிய இவர் , இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக உள்ள அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார்.
அவர் தனது வாழ்வின் 40 ஆண்டுகளை ஒரு விஞ்ஞானியாகவும், அறிவியல் நிர்வாகியாகவும் திகழ்ந்தார். பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் வாகனத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் அவரது அற்புதமான பணிகளுக்காக அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
வாங்கிய விருதுகள், எழுதிய புத்தகங்கள்:
இவர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
அப்துல் கலாம் அவர்கள், அக்னி சிறகுகள், இந்தியா 2020, இக்னைடட் ஸ்பிரிட் மற்றும் டிரான்சென்டென்ஸ் உள்ளிட்ட பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்கள் மற்றும் வாழ்க்கையின் போதனைகளால் பலர் இன்றும் ஊக்கம் பெற்று வருகின்றனர்.
சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டுதலை தரும் பொன்மொழிகளை Dr.APJ.அப்துல் கலாம் நமக்காக விட்டு சென்றுள்ளார். அவை என்ன என்பதை கீழே காணலாம்.
''கனவு காணுங்கள்.ஆனால் கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. உங்களைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு'' என்றார்.
''ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை. அதுவே பல முறை வந்தால் அது இலட்சியம்'' என்றார்.
''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''.
''சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன''.
''வாய்ப்புக்காக காத்திருக்காமல், உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.
இறுதி மூச்சு வரை ஆசிரியராக இருந்தார்:
ஆசிரியர்கள் சமுதாயத்தை உருவாக்குபவர்கள் என்றும், மாணவர்கள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்றும் நம்பிய ஒரு சிறந்த ஆசிரியர் அவர். அவர், ஐஐஎம் ஷில்லாங் மாணவர்களிடையில் சொற்பொழிவு ஆற்றும் போதுதான் டாக்டர் கலாம் இறுதி மூச்சு விட்டார்.