யார் இந்த பாபா சித்திக்? சல்மான் கானுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? கலக்கத்தில் மும்பை!!

First Published | Oct 13, 2024, 11:33 AM IST

பாலிவுட்டில் இடைத்தரகராக செயல்பட்டவரும் அரசியல்வாதியுமான பாபா சித்திக் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் முக்கிய பிரமுகராக இருந்தவர். 66 வயதான பாபா சித்திக் பாந்த்ரா மேற்கு பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.
 

பாலிவுட்டில் இடைத்தரகராக செயல்பட்டவரும் அரசியல்வாதியுமான பாபா சித்திக் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் முக்கிய பிரமுகராக இருந்தவர். 66 வயதான பாபா சித்திக் பாந்த்ரா மேற்கு பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

பாந்த்ரா கிழக்கில் உள்ள தனது மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றது. 

அரசியலில் பாபா சித்திக்கின் எழுச்சி மும்பையின் கொந்தளிப்பான சமூக-அரசியல் சூழலைப் பிரதிபலிக்கிறது. 1977ஆம் ஆண்டு தனது டீன் ஏஜ் பருவத்தில் காங்கிரஸ் கட்சியில் தனது பயணத்தை தொடங்கிய சித்திக், 1980ஆம் ஆண்டு வாக்கில் பாந்த்ரா தாலுகா இளைஞர் காங்கிரஸில் முக்கிய நபரானார். மூத்த காங்கிரஸ் தலைவர் சுனில் தத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1999 இல் பாந்த்ரா மேற்கிலிருந்து எம்.எல்.ஏ.வாக தனது முதல் தேர்தல் வெற்றியைப் பெற்றார். பின் தொடர்ந்து மூன்று முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

Baba Siddique

ஷாருக் கான் - சல்பான் கான்:

2004 முதல் 2008 வரை மகாராஷ்டிர அரசில் அமைச்சராகப் பதவி வகித்தபோது சித்திக்கின் செல்வாக்கு அதிகரித்தது. சித்திக்கின் செல்வாக்கு அரசியலுக்கு அப்பால் பாலிவுட்டிலும் விரிவடைந்தது. சூப்பர்ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கான் சமரசம் செய்து வைத்ததில் பாபா சித்திக் முக்கிய பங்காற்றியதாகப் பாராட்டப்பட்டார்.

மும்பையில் அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் ஆடம்பரமான இப்தார் விருந்துகளை நடத்தியுள்ளார். இந்த விருந்துகளில் நீண்ட காலமாக பிரிந்திருந்த பிரபலங்கள் சிலர் வெறுப்பைத் துறந்து ஒன்றாகக் கலந்துகொண்டனர். 2013ஆம் ஆண்டில் நடந்த இதுபோன்ற ஒரு நிகழ்வு அதிக கவனம் பெற்றது.

அந்த விருந்து நிகழ்ச்சி ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் மீண்டும் இணைவதற்குக் காரணமாக இருந்தது. சித்திக் இப்தார் விருந்தின்போது சல்மானின் தந்தையும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான சலீம் கானுக்கு அருகில் ஷாருக்கை கானை அமர வைத்தார். பாலிவுட்டின் இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கிடையில் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வர இந்த விருந்து உதவியது.

சித்திக்கின் சுடப்பட்டதை அறிந்து சல்மான் கான், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் பலர் நேரில் மருத்துவமனைக்கு வந்தனர். சித்திக்கின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Tap to resize

அரசியல் மாற்றம்:

பல ஆண்டுகளாக காங்கிரஸுடன் பயணித்த பாபா சித்திக் திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களால் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதாகக் கூறிய அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார் பிரிவில் சேர்ந்தார். அமைச்சராக இருந்தபோது செய்த குடிசை மாற்றுத் திட்ட முறைகேடு குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தவிர்க்கவே கட்சி மாறியாக விமர்சனங்கள் எழுந்தன.

என்.சி.பி.யில் சேருவதற்கு முன், "எனது பயணம் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியுடன் இருந்தது. தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எனது தந்தையைப் போன்றவர். ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

அரசியல் எதிர்வினைகள்:

சித்திக் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் தோழமையைப் பேணி வந்தார். இதனால், அவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த அரசியல்வாதிகள் மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தினர். சிவசேனா-உத்தவ் பிரிவு எம்பி பிரியங்கா சதுர்வேதி, பாபா சித்திக் கொலை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பாபா சித்திக் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து, மகாராஷ்டிர அரசை விமர்சித்துள்ளனர்.

பாபா சித்திக் படுகொலை மகாராஷ்டிராவைத் தாண்டியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பாபா சித்திக் படுகொலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் கண்டன குரல் எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்சிபியின் தேசிய தலைவருமான அஜித் பவார், இன்று அமராவதியில் நடைபெறவிருந்த தனது ஜன்சன்மன் யாத்திரையை ரத்து செய்தார். 

Latest Videos

click me!