திருப்பதி கோயிலுக்கு வரும் இந்து அல்லாதவர்கள் நிரப்பும் படிவம் என்ன ஆச்சு?

First Published | Oct 1, 2024, 5:04 PM IST

திருப்பதி கோயிலில் இந்து அல்லாத யாத்ரீகர் கையொப்பமிடுவதற்கான பிரகடனப் படிவம் ஏப்ரல் 9, 1990 இல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், திருப்பதி கோவிலில் பிற மதத்தினரை உள்ளேயே அனுமதிக்காமல் தடுக்கும் போக்கு நீண்ட காலமாகவே இருப்பதாகத் தெரிகிறது.

திருமலை திருப்பதியும் ஜெகன் மோகன் ரெட்டியும்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் குறித்த சீற்றம், இந்து அல்லாத யாத்ரீகர்களுக்கான படிவம் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.

ஜெகனின் திருப்பதி பயணம் செப்டம்பர் 28, 2024 அன்று நடைபெறவிருந்தது. கத்தோலிக்கராக இருந்த முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர், அவரது ஆட்சியில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்திய குற்றச்சாட்டு எழுத்ததால் திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்ய விரும்பினார்.

லட்டுவில் கலப்பட நெய் இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, கோயிலில் சுத்திகரிப்பு சடங்குகள் நடத்தப்பட்டன. துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயவாடாவில் உள்ள துர்கா கோயிலில் தவம் செய்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஜெகனை கைது செய்ய வேண்டும் என்றும், கோவிலுக்குள் நுழையும் முன் அவர் பிரகடனப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கோரின.

திருமலை திருப்பதி தேஸ்வதானம், ஜன சேனா மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகள் ஜெகன் திருமலைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பதி மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதானல் ஜெகனின் திருப்பதி பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஜெகன் படிவத்தில் கையெழுத்திட விரும்பாமல், கடைசி நிமிடத்தில் பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெகன் ஏற்கனவே ஒருமுறை படிவத்தில் கையெழுத்திட்டிருப்பதால் மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கோவிலுக்குச் செல்லலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்து அல்லாதவர்களுக்கான பிரகடனப் வடிவம்

இந்து அல்லாத ஒருவர் திருப்பதி கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். அவருக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கையும், அவரை வழிபடுவது குறித்த பயபக்தியும் உள்ளது என்று குறிப்பிடும் இந்தப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகுதான் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏப்ரல் 9, 1990 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கான அரசாணை [GO (MS No 311)] ஆந்திரப் பிரதேச வருவாய்த் துறையால் வெளியிடப்பட்டது.

படிவத்தில் கையெழுத்திட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தினமும் லட்சக்கணக்கில் திருப்பதி கோவிலுக்கு வரும் சாதாரண பக்தர்களிடம் இதுபோல படிவத்தைப் நிரப்பி வாங்குவது கடினம். இதனால், இந்த படிவம் பெரும்பாலும் விஐபி பார்வையாளர்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. கோவிலுக்குச் செல்ல விரும்பும் இந்து அல்லாத முக்கிய பிரமுகர்கள் படிவத்தில் கையொப்பமிடுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் செயல் அதிகாரி எல்.வி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

"இது நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் படிவத்தில் கையெழுத்திடவில்லை என்றால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அர்த்தமில்லை" எனவும் அவர் கூறுகிறார்.

Tap to resize

ஜெகனின் முந்தைய திருப்பதி பயணங்கள்

ஜெகன் திருமலை திருப்பதிக்குச் செல்வது எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2009-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்தபோது முதன்முதலாக கோயிலுக்குச் சென்றார். அப்போது, ​​அவர் கோயிலில் இந்து இல்லாதவருக்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார். 2012இல், அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ​​மீண்டும் ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். அப்போது, ஏற்கனவே 2009 இல் கையெழுத்திட்டு படிவத்தைச் சமர்ப்பித்துவிட்டதாகக் கூறி மீண்டும் கையெழுத்திட மறுத்தார்.

தனது ஆதரவாளர்களுடன் 'ஜெய் ஜெகன்' கோஷங்களை எழுப்பியவாறு கோவிலுக்குள் நுழைந்தார். 2020ல் ஆந்திரா முதல்வராக இருந்தபோது இந்தப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியது.

நம்பிக்கைப் பிரகடனப் படிவத்தில் கையொப்பமிடாமல் கோவிலுக்குள் நுழைந்த ஜெகனை தகுதி நீக்கம் செய்யக் கோரி, சுதாகர் பாபு என்ற விவசாயி, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏழுமலையானுக்குப் பட்டு வஸ்திரம் அளித்தபோது, ​​ஜெகன் முதல்வராக தனது பணிகளைச் செய்தார் என்றும், இதனால் படிவத்தில் கையெழுத்திடத் தேவையில்லை என்றும் கூறி, ஆந்திர உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேலும், “ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் மனுதாரரால் சமர்ப்பிக்க முடியவில்லை. தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார், பைபிள் படித்தார் அல்லது நற்செய்திக் கூட்டங்களில் கலந்துகொண்டார் என்பதை வைத்து ஒருவரை கிறிஸ்தவராக கருத முடியாது. விஜயவாடாவில் உள்ள ஒரு குருத்வாராவில் ஜெகன் மோகன் ரெட்டி பிரார்த்தனை செய்தார். அதனால் அவரை ஒரு சீக்கியர் என்று கூறிவிட முடியாது" என நீதிபதி பி.தேவாந்தந்த் தெரிவித்தார்.

வரலாறு என்ன சொல்கிறது

இந்து இல்லாதவர்களுக்கான படிவம் வருவதற்கு முன்பு இந்து அல்லாத விஐபிகளின் வருகை பற்றி அதிகம் தெரியவில்லை. 1969 மற்றும் 1980ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் திருப்பதி வருகைகளின்போது எந்த சிக்கலும் உருவாகவில்லை.

எழுத்துப்பூர்வ விதி இல்லாதபோதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு தடை இருந்ததாகவும், அதை நீண்ட காலமாகவே கடைப்பிடித்து வருவதாகவும் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

வட ஆற்காடு மாவட்டத்தின் முதல் கலெக்டராக இருந்த ஜார்ஜ் ஸ்ட்ராட்டன் காலத்தில்தான் பிற மதத்தினருக்கு எதிரான தடை பற்றிய குறிப்பு முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது. இந்தத் தடை திருப்பதி மாவட்டம் முழுவதும் நீட்டிக்கப்பட்டது.

ஆற்காடு நவாப்பிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றிய உடனேயே ஸ்ட்ராட்டன் கலெக்டரானார். கோயில் மரபுகளைப் பற்றி அறிய, கேள்வித்தாள் வடிவில் பொதுமக்களிடமிருந்து தகவல்களை சேகரிக்க முயன்றார். அது பின்னர் சவால்-இ-ஜவாப் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது 1949ஆம் ஆண்டு அறிஞரும் ஓய்வு பெற்ற தாசில்தாருமான வி. என். சீனிவாச ராவ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

'சவால்-இ-ஜவாப்' அறிக்கையின்படி, இந்து அல்லாத பிற மத நம்பிக்கை கொண்ட மிலேச்சர்கள் மற்றும் சண்டாளர்கள் மலைகளில் ஏற தடை விதிக்கப்பட்டது. தான் சேகரித்த தகவலின் அடிப்படையில், கோவிலுக்குச் செல்பவர்களைக் கட்டுப்படுத்த முயன்றார் கலெக்டர் ஸ்ட்ராட்டன்.

அறிவிக்கப்படாத தடை

ஸ்ரீனிவாச ராவ், ஆங்கிலேயர்கள் எவ்வாறு மிலேச்சர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கான அறிவிக்கப்படாத தடையை உன்னிப்பாகக் கடைப்பிடித்தார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் ராணுவத்தில் இருந்தால் கூட அவர்களை மலை ஏற அனுமதிக்கவில்லை என்பதையும் பல நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

ராபர்ட் ஓர்ம் தனது "ஹுடுஸ்தானில் பிரித்தானியரின் இராணுவ பரிவர்த்தனைகளின் வரலாறு" என்ற நூலில் , ஒரு இராணுவ நெருக்கடியின்போது கூட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த வழக்கத்தைத் தகர்க்காமல் உறுதியாக இருந்தனர் என்று விவரிக்கிறார்.

உதாரணமாக, திருப்பதியில் கோயில் சொத்துகளை வாடகை நிர்வாகம் தொடர்பாக சில பாளையக்காரர்களுக்கும் மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே மார்ச் 1759 இல், சண்டை மூண்டது. அப்போது கோயில் பிரிட்டிஷ்-எதிர்ப்பாளர்களால் சூழப்பட்டது. மஹரட்டா பாளையக்காரர்களும் சந்திரகிரி முஸ்லீம் ஆட்சியாளர்களும் பிரிட்டிஷ்கார ர்கள் தங்களுக்கு வாடகை செலுத்தப்பட வேண்டும் என்று கோரினர். ஆனால், அவர்கள் கோவிலுக்குள் நுழையவோ, பக்தர்களுக்கு இடையூறு செய்யவோ முயற்சிக்கவில்லை.

“ஹைதராபாத் நிஜாம்களும், கர்நாடக நவாப்களும் வழக்கமான நடைமுறை தொடர அனுமதித்தனர். அவர்கள் கோயில் நிலத்தை இந்துக்களுக்கு விவசாயம் செய்ய வாடகைக்கு அளித்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் திருப்தி அடைந்தனர். பின்னர், கிழக்கிந்திய கம்பெனி வாடகை பெற்றுக்கொண்டு விவசாயம் செய்ய அனுமதிக்கும் நடைமுறையைத் தொடர்ந்தது. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அன்னியர்களின் தாக்குதல்களிலிருந்து கோயிலைப் பாதுகாத்து வந்தது" என்றும் ஸ்ரீனிவாச ராவ் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

Latest Videos

click me!