Published : Jul 14, 2025, 11:11 AM ISTUpdated : Jul 14, 2025, 11:15 AM IST
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்பும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியா நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருப்பதாகக் அவர் கூறினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து பூமிக்குத் திரும்புவதற்கு முன்னர், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது பிரியாவிடை உரையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
"41 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இந்தியர் விண்வெளிக்கு வந்து, இந்தியா மேலே இருந்து பாக்கும்போது எப்படிப் இருக்கிறதுஎன்று சொன்னார். இன்றைய இந்தியா அச்சமற்றதாகத் தெரிகிறது, இன்றைய இந்தியா நம்பிக்கையுடன் தெரிகிறது, இன்றைய இந்தியா பெருமையுடன் தெரிகிறது... இன்றைய இந்தியா இன்னும் 'சாரி ஜஹான் சே அச்சா'வாகத் தெரிகிறது," என்று சுக்லா கூறினார்.
25
பயணம் தொடங்கிவிட்டது
ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் பேசிய சுக்லா, "விண்வெளி ஆய்வில் நமது பயணம் நீண்டதாகவும் கடினமானதாகவும் இருக்கலாம், ஆனால் அது தொடங்கிவிட்டது," என்று அவர் கூறினார்.
நான்கு பேர் கொண்ட ஆக்சியம்-4 குழு ஜூன் 25 அன்று புறப்பட்டு மறுநாள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அவர்கள் 14 நாட்கள் தங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக இந்த பணி கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
35
நம்பமுடியாத பயணம்
அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவின் சுக்லா, போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னாஸ்கி-விஸ்னிவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் டிபோர் கப்பு ஆகிய நான்கு பேரும் இந்த பிரியாவிடை நிகழ்வில் பேசினர். இதில் விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்கள் கலந்துகொண்டனர். விண்வெளி நிலையத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் உத்வேகத்தை அளித்ததற்காக ஆக்சியம் குழுவினருக்கு அவர்கள் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
குரூப் கேப்டன் சுக்லா கூறுகையில், “இந்த பயணம் நம்பமுடியாததாக இருந்தது, நான் ISS-க்கு வந்தது நான் கற்பனை செய்ததைவிட வெகுதூரம். ISS-ல் இருந்து இனிமையான நினைவுகளையும் கற்றல்களையும் நான் எடுத்துச் செல்கிறேன். ISS-ல் நாங்கள் நிகழ்த்திய அறிவியல் பரிசோதனைகள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
ஆக்சியம்-4 பணிக்கு உதவிய அனைத்து ISS குழு உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளையும் அவர் பாராட்டினார். "நான் எடுத்துச் செல்லும் ஒரு விஷயம் என்னவென்றால், நாம் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்படும்போது மனிதகுலம் எதை அடைய முடியும் என்பதுதான்," என்று அவர் கூறினார். "விரைவில் பூமியில் சந்திப்போம்," என்று அவர் விடைபெற்றார்.
நாசாவின் கூற்றுப்படி, டிராகன் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பிரியும் செயல்முறை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், கலிபோர்னியா கடற்கரைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களும் தரையிறங்குவார்கள். அதன் பிறகு, விண்வெளி வீரர்கள் சுமார் ஏழு நாட்களுக்கு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் இருப்பார்கள். அவர்களின் உடல் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப மாற்றுவதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
55
இஸ்ரோ கருத்து
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுக்லா ISS-ல் திட்டமிடப்பட்ட அனைத்து அறிவியல் பரிசோதனைகளையும் நிகழ்த்தியதாகக் கூறியுள்ளது. இந்தியா தலைமையிலான மைக்ரோகிராவிட்டி பரிசோதனைகள் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சல் என்றும் இஸ்ரோ கூறியது. "இது ககன்யான், இந்திய விண்வெளி நிலையம் மற்றும் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் முக்கியமான அறிவுப் பங்களிப்பாக இருக்கும்," என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.