ஒருவரிடம் "ஐ லவ் யூ" சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் உள்நோக்கம் நிரூபிக்கப்படாவிட்டால் அது பாலியல் துன்புறுத்தல் அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒருவரிடம் "ஐ லவ் யூ" (I love you) என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாலியல் உள்நோக்கம் இருந்தது நிரூபிக்கப்பட்டாலன்றி, அதை பாலியல் துன்புறுத்தல் என்று கூற முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ். அகர்வால், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தார்.
இந்த வழக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணால் பதிவு செய்யப்பட்டது. பாலியல் உள்நோக்கம் இல்லாமல் தொடுவது பாலியல் குற்றமாகக் கருதப்படாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது.
23
ஆதாரமே இல்லை
குற்றம் சாட்டப்படும் நபர் "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டுமே கூறியதாக புகார் அளித்தவரே வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவோ, பின்தொடரவோ செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் உள்நோக்கத்துடன் குற்றத்தைச் செய்தார் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் மைனர் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
33
2019இல் சிறுமி அளித்த புகார்
இந்த வழக்கு சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள குருட் காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ஒரு 15 வயது தலித் சிறுமியால் தாக்கல் செய்யப்பட்ட புகார் தொடர்பானது. இந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல்துறை FIR பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் தம்தாரி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தை அணுகியது.