இந்திய எம்எல்ஏக்களின் சொத்துக்கள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்த ஏடிஆர் அறிக்கை வெளியாகியுள்ளது. அதிக சொத்துக்கள் கொண்ட எம்எல்ஏக்கள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் இதில் அடங்கும்.
இந்தியாவின் எம்எல்ஏக்களிடையே குறிப்பிடத்தக்க சொத்து வேறுபாடு இருப்பதை சமீபத்திய ஏடிஆர் அறிக்கை வெளிப்படுத்துகிறது. மும்பையைச் சேர்ந்த பாஜகவின் பராக் ஷா ரூ.3,383 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார், அதே நேரத்தில் மேற்கு வங்கத்தின் நிர்மல் குமார் தாரா ரூ.1,700 மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார்.
4,092 பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்நாடகாவும் ஆந்திராவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களின் மையங்களாக உள்ளன. காங்கிரஸ் கட்சியின் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து வைத்திருக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல் பத்து இடங்களில் வந்துள்ளனர்.
24
Karnataka news billionaire MLAs ADR report
மாநில வாரியாக, கர்நாடக எம்எல்ஏக்கள் மொத்தமாக ரூ.14,179 கோடி சொத்துக்களுடன் அதிகபட்ச சொத்துக்களைக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளன. மாறாக, திரிபுராவின் எம்எல்ஏக்கள் ரூ.90 கோடி சொத்துடன் மிகக் குறைந்த சொத்துக்களைக் கொண்டுள்ளனர். ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு அடிப்படையிலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன.
அனைத்து எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு, ரூ.73,348 கோடி. இது பல வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைந்த பட்ஜெட்டுகளை விட அதிகமாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. குறிப்பாக, பாஜக எம்.எல்.ஏ.க்கள் மிகப்பெரிய சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.
34
Karnataka news billionaire MLAs ADR report
இந்திய மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 45 சதவீதம் பேர் (4,092 பேரில் 1,861 பேர்) தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களில், 1,205 சட்டமன்ற உறுப்பினர்கள் (29 சதவீதம்) வன்முறை குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள்.
குற்றவியல் வழக்குளை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்களின் அதிகம் இருக்கும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் (79 சதவீதம்). அதைத் தொடர்ந்து கேரளாவும் தெலுங்கானாவும் உள்ளன (இரண்டும் 69 சதவீதம்). கடுமையான குற்ற வழக்குகள் அடிப்படையில் பார்த்தாலும் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேச எம்எல்ஏக்களில் 56 சதவீதம் பேர் இதுபோன்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
44
குற்ற வழக்குகள் உள்ள எம்எல்ஏக்களின் அதிகமாக உள்ள கட்சி தெலுங்கு தேசம் கட்சி (86 சதவீதம்). பாஜகவில் 638 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. கடுமையான குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் கட்சி (61%) முதலில் உள்ளது. அதைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி (44%) இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜகவில் 436 எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது பரவலாக குற்ற வழக்குகள் இருப்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் அரசியல் சூழலில் மக்கள் பிரதிநிதிகளின் தகுதி குறித்தும் இந்த அறிக்கை கேள்விகளை எழுப்புகிறது.