
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா அழித்தது. இதன்பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில், நம்முடைய முப்படைகளும் இனைந்து பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டின. இந்தியாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் சின்னபின்னமாகின. நமது இந்திய ராணுவத்தின் செயலை உலகமே வியந்து பாராட்டி வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்திற்கு சென்று விமானப்படை வீரர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியக் காட்டியதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது உரையாற்றிய ராஜ்நாத் சிங், ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. வெறும் டிரெய்லர் தான் நடந்து முடிந்துள்ளது. சரியான நேரம் வரும்போது, முழு படத்தையும் உலகிற்கு காண்பிப்போம்'' என்றார்.
பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் தாக்குதல்களின் துல்லியம் மற்றும் வேகத்தை பாராட்டிய ராஜ்நாத் சிங், இது இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவ வலிமையின் சின்னம் என்று புகழாரம் சூட்டினார். மேலும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங், ''நாம் பாகிஸ்தானை சோதனையில் வைத்திருக்கிறோம். அதன் நடத்தை மேம்பட்டால், சரி. இல்லையெனில், அதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி அளித்தற்கு கவலை தெரிவித்த ராஜ்நாத் சிங், அது பயங்கரவாதத்திற்கு நிதியளிக்க திருப்பிவிடப்படலாம் என்று குற்றம் சாட்டினார். "சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்பட்ட நிதியில் பெரும்பகுதியை பாகிஸ்தான் தனது நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்காக செலவிடுகிறது. பாகிஸ்தானுக்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது" என்று அவர் கூறினார்.
மேலும் இந்தியாவின் ஏவுகணைத் திறன்களை பாகிஸ்தான் அங்கீகரித்ததையும் அவர் மேற்கோள் காட்டினார். "பிரமோஸ் ஏவுகணையின் சக்தியை பாகிஸ்தான் கூட ஏற்றுக்கொண்டுள்ளது'' என்றார்.
மேலும் விமானப்படையின் செயல்திறனைப் பாராட்டிய ராஜ்நாத் சிங், ''மக்கள் காலை உணவு சாப்பிட எடுக்கும் நேரத்தில் எதிரிகளின் நாட்டிற்குச் சென்று ஏவுகணைகளை வீசினீர்கள். பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை நசுக்க இந்திய விமானப்படைக்கு 23 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது.
இதன் எதிரொலியை இந்தியாவின் எல்லைகளில் மட்டுமல்ல; முழு உலகமும் கேட்டது. அது வெறும் ஏவுகணையின் எதிரொலி மட்டுமல்ல; உங்களின் துணிச்சலின் எதிரொலியும் கூட'' என்று கூறினார்.
தொடர்ந்து விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங்கை பாராட்டிய ராஜ்நாத் சிங்,''சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்கை வகித்தது, இது இந்த நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பாராட்டப்படுகிறது.
இதற்காக விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங்குக்கும், அவரது முயற்சிகளுக்கும், அவரது முழு குழுவிற்கும், அவரது அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது சிறிய விஷயமல்ல. நமது விமானப்படை பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் அடைய முடியும், இது எல்லா வகையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார்.