இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மாநில அரசு போதிய வேகம் காட்டவில்லை. ஒத்துழைப்பு தருவதில்லை. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மாநில அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளன.
தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு சராசரியாக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது 9 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
தமிழகத்தில் ரூ.3,147 கோடி செலவில் 77 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் ரயில் பாதைகள் 97% மின்மயமாக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.