Published : Apr 24, 2025, 04:30 PM ISTUpdated : Apr 24, 2025, 05:58 PM IST
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய அவர், பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இந்தியா தண்டிக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக பொதுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளும் சதிகாரர்களும் தங்கள் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தில் மதுபனி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி பேசினார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை உலகம் அறிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இந்தியில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த மோடி, ஆங்கிலத்திற்கு மாறி, "ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இந்தியா அடையாளம் கண்டு, கண்காணித்து தண்டிக்கும்" என்றார்.
24
Modi English Speech
பூமியின் கடைசி மூலை வரை:
"இன்று இந்த பீகார் மண்ணிலிருந்து ஒட்டுமொத்த உலகத்துக்கும் நான் கூறுகிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கும். பூமியின் கடைசி மூலை வரை சென்றாலும் சரி, அவர்களைப் பிடித்துத் தண்டனை வழங்குவோம்" என்று பிரதமர் மோடி ஆங்கிலத்தில் கூறினார்.
"பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழு தேசமும் இதில் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த விஷயத்தில் எங்களுடன் நிற்கும் பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அந்நாட்டுகளின் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
34
Modi in Bihar
பீகாரில் பேச்சு:
பீகார் மாநிலம் மதுபனியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் மைதிலி மற்றும் இந்தி மொழியைப் பேசுகிறார்கள். அந்த மக்கள் மத்தியில் சென்று ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. நரேந்திர மோடியின் தாய்மொழி குஜராத்தி. ஆனால், சர்வதேச அரங்குகள் உள்பட எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் இந்தியிலேயே பேசும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அபூர்வமாக ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
மோடி தனது செய்தியை உலகிற்குத் தெரிவிக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. சர்வதேச பார்வையாளர்களை நோக்கி உரையாற்றும்போது ஆங்கிலத்தையும் இந்தியையும் கலந்து பேசுவது வழக்கம்.
ஜூன் 2023 இல் ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற மோடி, கான்பெராவில் உள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். வலுவான இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டாண்மைக்கான தொலைநோக்கு பார்வையை வலியுறுத்த ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். செப்டம்பர் 2024 இல், நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபையின் 'எதிர்கால உச்சி மாநாட்டில்' பிரதமர் மோடி ஆங்கிலத்தில் தனது பேசினார்.
1977ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்தியில் உரையாற்றினார். ஐ.நா. சபையில் இந்தியில் பேசிய முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்தார். பாஜகவின் மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பாரம்பரியத்தைப் பின்பற்றி மோடியும் அவரது வழியில் இந்தியைத் தீவிரமாகப் பரப்பி வருகிறார்.