
விக்கிப்பீடியா ஒரு இலவச என்சைக்ளோபீடியா என்று கூறப்படுகிறது. ஆனால் விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து தகவல்களும் உலகெங்கிலும் உள்ள ஒரு சிறிய குழுவினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை OpIndia ஆய்வு அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.
விக்கிபீடியா கட்டுரைகளில் திருத்தம் செய்வதைத் தடுப்பது, எடிட் செய்பவர்களைத் தடை செய்வது, பிரச்சினைகளை முடிவு செய்வது, பக்கங்களை நீக்குவது, பக்கங்களைப் லாக் செய்வது போன்றவற்றை அதிகாரம் படைத்த ஒருசிலர் மட்டும். செய்கிறார்கள் என்று OpIndia ஆய்வறிக்கை கூறுகிறது.
உலகெங்கிலும் 435 நிர்வாகிகள் மட்டும் இந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது. ஆனால் விக்கிபீடியாவின் நடுவர் குழுவில் 10 பேர் மட்டும்தான் உள்ளனர். 'editor retention program' என்ற திட்டத்தின் கீழ் விக்கிமீடியா அறக்கட்டளை இவர்களில் பலருக்கு ஊதியம் வழங்கி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் விக்கிப்பீடியாவும், மற்ற நிறுவனங்களைப் போலவே, கடுமையான உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது என்பதை உறுதியாகிறது என்றும் ஆய்வறிக்கை வாதிடுகிறது.
விக்கிமீடியா அறக்கட்டளைக்கு மில்லியன் கணக்கான மானியங்களை வழங்கும் கூகுள் நிறுவனத்துக்கும் விக்கிமீடியாவுக்கும் இடையே ஒரு முறையான வணிகத் தொடர்பு உள்ளது என்றும் ஆய்வறிக்கை சொல்கிறது. பிரபலங்களைப் பற்றிய அவதூறு கருத்துகள் அடங்கிய பக்கங்களை உருவாக்க கூகுள் விக்கிப்பீடியாவை பயன்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், சர்ச்சைக்குரிய இந்தப் பக்கங்கள் லாக் செய்யப்பட்டு இருக்கின்றன; அதாவது ஒரு சில எடிட்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே இவற்றைத் திருத்த முடியும்.
யாரேனும் ஒருவர் தவறான தகவலைச் சரிசெய்ய அல்லது சார்புகளை கருத்துகளைச் சரிசெய்ய முயன்றால், அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். பிறர் திருத்தங்கள் செய்தாலும் அவை மாற்றியமைக்கப்படுகின்றன. சில சமயங்களில், நிர்வாகிகள் அல்லது மூத்த எடிட்டர்களால் சில எடிட்டர்களே பிளாக் செய்யப்படுவார்கள். இதன் விளைவாக, கூகுள் விரும்பியபடி அவதூறான தகவல்களை ஒருபோதும் சரிசெய்ய முடியாத நிலை உள்ளது என OpIndia வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை புகார் கூறுகிறது.
விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளை, மில்லியன் கணக்கான நன்கொடைகளையும் மானியங்களையும் பெற்றுள்ளது. குறைந்தபட்சம் இன்னும் 75 ஆண்டுகள் செயல்படுவதற்குத் தேவையான எண்டோவ்மென்ட் ஃபண்ட் மற்றும் சொத்துக்கள் விக்கிப்பீடியாவிடம் உள்ளன.
பிரபல நிறுவனங்கள் பல இதில் குறிப்பிடத்தக்க புரவலர்களாக உள்ளனர். அமேசான் (5 மில்லியன் டாலர்), Google.org (2 மில்லியன் டாலர்), ஜார்ஜ் சோரோஸ் (2 மில்லியன் டாலர்), மஸ்க் அறக்கட்டளை (2 மில்லியன் டாலர்), பேஸ்புக் (1 மில்லியன் டாலர்), தி ரோத்ஸ்சைல்ட் அறக்கட்டளை (50,000 டாலர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க புரவலர்களாக உள்ளனர் என்று OpIndia ஆய்வு தெரிவிக்கிறது.
விக்கிமீடியா அறக்கட்டளை இடது சார்புள்ள ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளிக்கிறது. விக்கிமீடியா அறக்கட்டளைக்கு உபரி நிதி இருக்கும் நிலையில், "விக்கிபீடியாவை உயிருடன் வைத்திருக்க" என்று கூறி சேகரிக்கப்படும் பணம் எங்கு செல்கிறது என்பதை ஆராயவது முக்கியம் எனவும் வலியுறுத்துகிறது.
டைட்ஸ் அறக்கட்டளையும் விக்கிமீடியா அறக்கட்டளையும் இணைந்து பல இந்திய எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு அமைப்புகளுக்கு நன்கொடைகள் வழங்குகின்றன என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான இந்துக்கள் (HfHR) என்ற அமைப்புக்கு டைட்ஸ் அறக்கட்டளை மானியங்களை வழங்கியுள்ளது. இது இஸ்லாமியர்கள் மற்றும் காலிஸ்தானியர்களுடன் தொடர்புடையது. 2019இல் இரண்டு இஸ்லாமியக் குழுக்களால் உருவாக்கப்பட்டது என அறிக்கை சொல்கிறது.
டைட்ஸ் அறக்கட்டளையிடமிருந்து அமன் (AMAN) அறக்கட்டளை நிதியுதவி பெற்றுள்ளது. இது இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்பும் இடது சார்பு கொண்ட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டது. சீனா ஆதரவு பெற்ற நியூஸ் கிளிக் நிறுவனத்துடன் அமன் அறக்கட்டளைக்குத் தொடர்பு உள்ளது. இந்திய இறையாண்மையை சீர்குலைக்க முயலும் சீன நிறுவனங்கள் மூலம் நியூஸ் கிளிக்கிற்கு நிதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது என்றும் OpIndia அறிக்கை கூறுகிறது.