நிமிஷா பிரியா 2011 இல் தனது குடும்பத்துடன் வேலைக்காக ஏமன் சென்றார். ஆனால் அவரது கணவரும் மகளும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிதிப் பிரச்சினைகள் காரணமாக இந்தியா திரும்பினர். நிமிஷா தனது குடும்பத்திற்காக சம்பாதிக்க அங்கேயே தங்கி ஒரு கிளினிக்கைத் திறக்க முடிவு செய்தார். இதற்காக ஏமன் சட்டப்படி, அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மஹ்தியுடன் கூட்டாக செயல்படத் தொடங்கினார்.
இந்நிலையில், மஹ்தி நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்தி அச்சுறுத்தியதுடன், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளார். தனது பாஸ்போர்ட்டைப் பெற்று ஏமனை விட்டு வெளியேற முயன்ற நிமிஷா, மஹ்திக்கு மயக்க மருந்து கொடுக்க முயன்றார். ஆனால், அந்த மருந்து அதிகப்படியாகி மஹ்தி இறந்துவிட்டார். இதனால், மஹ்தியின் கொலைக்கு நிமிஷாதான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு, 2020 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாளை மறுநாள் (ஜூலை 16) நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், கடைசி நேர முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வழக்கு ஜூலை 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.