
பிரதமர் மோடி இரண்டு நாள் (டிசம்பர் 21, 22) சுற்றுப்பயணமாக குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். இதன் மூலம் 43 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக குவைத் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் பெறுகிறார். இது மோடி பிரதமரானதும் மேற்கொள்ளும் முதல் குவைத் பயணமாகவும் அமைகிறது.
குவைத் நாட்டின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்நாட்டின் அமிர் ஷேக் மீஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா பிரதமர் மோடியை குவைத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்ததை அடுத்த இந்தப் பயணம் திட்டமிட்டப்பட்டது.
சனிக்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, பிற்பகலில் குவைத்தின் அமிரி விமான நிலையத்தை அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்த 101 வயது IFS அதிகாரியையும் மோடி சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து மோடி வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமில் கலந்துகொள்கிறார். அங்கு இந்தியத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் மோடி, மாலை ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு வளைகுடா கால்பந்து தொடர் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார்.
மறுநாள் காலையில், பாயன் அரண்மனையில் குவைத் அரசு சார்பில் வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வார். பின், குவைத் நாட்டின் அமிருடன் பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெறும். குவைத் இளவரசருடனும் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புகளின்போது இந்தியா - குவைத் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மோடி விமானம் மூலம் டெல்லி திரும்புவார்.
பிரதமர் மோடியின் இந்த குவைத் பயணம் இருநாடுகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எண்ணெய் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படலாம். இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக குவைத் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2023-24ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்தியா - குவைத் இடையே 10.47 பில்லியன் டாலர் மதிப்பிலான கண்ணா எண்ணெய் வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக முக்கிய தாக்கம் செலுத்துகிறது. இது தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் பிரதமரின் குவைத் பயணத்தில் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இத்துடன் பாதுகாப்பில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் பிரதமர் மோடிக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் அளித்துள்ளனர். குவைத்தில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் கணிசமான அளவில் உள்ளனர். சுமார் 10 லட்சம் இந்தியர்கள் குவைத்தில் பல்வேறு துறைகளில் பணியில் உள்ளனர். இன்று, குவைத்தில், பிரதமர் வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்றார்.அங்கு 90% க்கும் அதிகமான மக்கள் இந்தியர்கள். அவர்களுடன் மோடி உரையாடினார்.
கடந்த காலங்களிலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடிய பல நிகழ்வுகள் உள்ளன. 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள L&T தொழிலாளர்களின் குடியிருப்பு வளாகத்தைப் பார்வையிட்டார். ரியாத்தில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் அனைத்து மகளிர் ஐடி மற்றும் ஐடிஇஎஸ் மையத்தையும் மோடி பார்வையிட்டார். அதே ஆண்டில், கத்தாரின் தோஹாவில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு பிரதமர் மோடி சென்றார்.
முன்னதாக 2015இல், பிரதமர் மோடி அபுதாபியில் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனில் இந்தியாவின் அக்கறையை எடுத்துரைத்தார். இந்திய தொழிலாளர்களின் முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் உரையாடினார். இந்தியர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் குடியேறுவதை உறுதி செய்வதில் பிரதமர் மோடி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இது சம்பந்தமாக 2014இல் தொடங்கப்பட்ட இ-மைக்ரேட் திட்டம், ஒரு முக்கிய முயற்சியாக ஆகும். இது வேலைக்காக இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறுவதை எளிதாக்குகிறது. முறைகேடுகளையும் குறைக்கிறது.