ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். சுமார் 6,800 கோடி செலவில் இருவழிப்பாதையாக இந்த ஜோஜிலா சுரங்கப்பாதை அமைகப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவல் 19 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கீழ் ஜோஜிலா கணவாய் பகுதியில் 6800 கோடி செலவில் 13.14 கிலோமீட்டர் நீளம் கொண்ட இருவழிப்பாதையாக இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இது இமையமலையில் உள்ள ஜோஜிலா கணவாய்க்கு அடியில் காஷ்மீரில் உள்ள கந்தர்பால் மற்றும் லாடாக்கின் கார்கில் மாவட்டத்தில் உள்ள திராஸ் நகரை இணைக்கிறது. இந்த சுரங்கப்பாதை, புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி கட்டமைக்கப்படும் ஸ்மார்ட் டனல் (SCADA) அமைப்பின் மூலம் கட்டப்படுகிறது.
இதில், சிசிடிவி, ரேடியோ கட்டுப்பாடு, தடையில்லா மின்சாரம், காற்றோட்டம் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஜோஜிலா திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியன் மூலம் இந்திய அரசுக்கு 5000 கோடிக்கு மேல் செலவினம் மிச்சமாகியுள்ளது. இதுவரை ஜோஜிலா சுரங்கப்பாதையின் 28% பணிகள் நிறைவடைந்துள்ளன.