
இந்த ஆண்டு கேரள மாநில திருவோணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த அல்தாஃப் என்பவர்தான் முதல் பரிசாக ரூ.25 கோடியை வென்றுள்ளார்.
அல்தாஃப் கடந்த மாதம் வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரியில் இருந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். கர்நாடகாவில் மெக்கானிக்காக பணிபுரியும் இவர், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். இறுதியாக அதிர்ஷ்டம் தன் பக்கம் திரும்பியுள்ளது என்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அல்தாஃப் தெரிவித்துள்ளார்.
"லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து வாங்கும்போது பலர் அவரை ஊக்கப்படுத்தினர். அவர் இந்த முறை பம்பர் பரிசு கிடைக்கும் என்று நினைத்து, நம்பிக்கையுடன் டிக்கெட்டை வாங்கினார்" என்று அல்தாஃப்பின் உறவினர் ஒருவர் சொல்கிறார்.
அல்தாஃப் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மகள், மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பது அல்தாப்பின் கனவு. தனக்கு இன்னும் வீடு இல்லாததால், சொந்தமாக வீடு வாங்கவும் ஆசைப்படுகிறார். இந்த ஆசைகளை நிறைவேற்ற லாட்டரி பணத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ரூ.25 கோடி லாட்டரி அடித்தவருக்கு அந்த தொகை முழுவதும் கைக்கு வருமா என்றால், இல்லை என்று சொல்ல வேண்டும். ஓணம் பம்பரில் மட்டுமின்றி எந்த லாட்டரியிலும் பரிசுத் தொகை முழுவதும் அதிர்ஷ்டசாலிகளுக்குச் செல்வதில்லை. பல வரிப் பிடித்தங்களுக்குப் பிறகு, எஞ்சிய தொகைதான் அதிர்ஷ்டசாலிக்குக் கிடைக்கும். பரிசுத் தொகையான ரூ.25 கோடியில் பாதிதான் கிடைக்கும். அதாவது சுமார் ரூ.12 கோடிதான் அல்தாஃப் பெறுவார். அது எப்படி என்று பார்க்கலாம்.
திருவோணம் பம்பர் பரிசுத் தொகை: 25 கோடி
ஏஜென்சி கமிஷன் 10 சதவீதம்: 2.5 கோடி
பரிசு வரி 30 சதவீதம்: 6.75 கோடி
முதல் பரிசு வென்றவரின் கணக்கு: 15.75 கோடி
வரி மீதான கூடுதல் கட்டணம் 37 சதவீதம்: 2.49 கோடி
உடல்நலம் மற்றும் கல்விக்கான வரி: 3.49 கோடி
கணக்கில் உள்ள தொகை: 2.85 கோடி
இந்த அனைத்து வரிகளும் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு அதிர்ஷ்டசாலி அல்தாஃப் பெறுவது ரூ.12,88,26,000 (12.8 கோடி)
அல்தாஃப் மட்டுமல்ல, அவருக்கு லாட்டரி விற்பனை செய்தவரும் அதிர்ஷ்டசாலிதான். சுல்தான் பத்தேரியில் என்ஜிஆர் லாட்டரி கடையின் உரிமையாளர் நாகராஜ் விற்பனை செய்த TG 434222 என்ற டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்தது. நாகராஜ் பனமரம் எஸ்கே லக்கி சென்டரின் பத்தேரி கிளையில் மொத்தமாக டிக்கெட் வாங்கியுள்ளார்.
இரண்டாம் பரிசாக திருவனந்தபுரம் (5), பாலக்காடு (4), கொல்லம் (4), திருச்சூர் (3), பத்தனம்திட்டா (2), மலப்புரம் (1), மற்றும் கண்ணூர் (1) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 நபர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. 10 சீரிஸ்களில் தலா 2 பேர் வீதம் மொத்தம் 20 பேர் தலா 50 லட்சம் ரூபாய் மூன்றாம் பரிசு பெறுவார்கள். இதேபோல 4வது பரிசாக தலா ரூ.5 லட்சம் கிடைக்கும். மொத்தம் 5,34,670 பரிசுகள் வழங்கப்படுகின்றன.