இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் ரயில் டிக்கெட் புக் செய்யும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீடு (Senior Citizen Quota) என்பதைத் தேர்வு செய்து புக் செய்ய வேண்டும்.
ஆண்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், பெண்களில் 58 வயதுக்கு மேற்பட்டவர்களும் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையைப் பெறலாம். ஆண்களுக்கு அடிப்படை விலையில் 40% தள்ளுபடி கிடைக்கும். பெண்களுக்கு அடிப்படை விலையில் 50% தள்ளுபடி கொடுக்கப்படும்.
சாதாரண ரயில்களில் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி, ஜன் சதாப்தி, துரந்தோ குழும ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குகப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெற விரும்பாதவர்கள் கூட இருக்கலாம். அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, சலுகை பெற விரும்பவில்லை எனக் குறிப்பிட வேண்டும்.
சரியான தகவல்களைக் குறிப்பிட்டு ரயில் டிக்கெட் பதிவு செய்யவேண்டும். சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் பயணத்தின்போது வயதை சரிபார்க்க ஏதேனும் ஒரு அடையாளச் சான்றினை வைத்திருக்க வேண்டும். டிக்கெட் சரிபார்ப்புக்கு வரும் அதிகாரியிடம் அதனைக் காட்ட வேண்டும்.