சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய விதிகளை கொண்டுவர உள்ளது. சைபர் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 'ஏஜ்-வெரிஃபிகேஷன்' மற்றும் பெற்றோர் கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் வரப்போகின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் மணி கணக்கில் மூழ்கியிருக்கும் சிறுவர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு களமிறங்கியுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் தவறான உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க 'ஏஜ்-வெரிஃபிகேஷன்' (வயது சரிபார்ப்பு) போன்ற கடுமையான விதிகளை அரசு பரிசீலித்து வருகிறது. முழுமையாகத் தடை செய்வதை விட, வயதுக்கு ஏற்ப அம்சங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு மாடலை அரசு யோசித்து வருகிறது.
24
அரசின் திட்டம் என்ன?
பல குழந்தைகள் தவறான பிறந்த தேதியைக் கொடுத்து சோஷியல் மீடியாவில் கணக்கு தொடங்குகின்றனர். இதைத் தடுக்க, அரசு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது. இதில், பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control), குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே ஆப் ஆவது (Screen Time Limit), 13 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு டைரக்ட் மெசேஜ் அல்லது ரீல்ஸ் போன்ற சில அம்சங்களைத் தடுப்பது, மற்றும் யூசரின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பை சோஷியல் மீடியா நிறுவனங்களே ஏற்பது போன்ற விஷயங்கள் ஆலோசனையில் உள்ளன.
34
நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள்
இந்த விதிகளைச் செயல்படுத்துவதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் வரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1. கிராமப்புறங்களில், ஒரே போனை ஒரு குடும்பமே பயன்படுத்தும். அப்போது, பயன்படுத்துவது பெற்றோரா, குழந்தையா என அறிவது கடினம். 2. வயதைச் சரிபார்க்க அடையாள அட்டை கேட்டால், யூசர்களின் பிரைவசி கேள்விக்குறியாகும். 3. கடுமையான விதிகள், குழந்தைகளின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்துமா என்ற விவாதமும் நடக்கிறது.
தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளில் திருத்தம் செய்து, இந்த புதிய விதிகளை அரசு அமல்படுத்தக்கூடும். தற்போதைக்கு, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தனி விதிகள் தேவையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அரசு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.