இந்த நிலையை முற்றிலும் மாற்றியமைத்தது 1909-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தான். ஓகில் சந்திர சென் (Okil Chandra Sen) என்ற பயணி மேற்கு வங்கத்தில் உள்ள அகமத்பூர் ரயில் நிலையம் வழியாக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென வயிறு உபாதை ஏற்படவே, உடனடியாக ஸ்டேஷனில் இறங்கி கழிப்பறைக்குச் சென்றார்.
அவர் திரும்புவதற்குள் ரயில் கிளம்புவதற்கான விசிலை கார்டு ஊதிவிட்டார். பதறியடித்த ஓகில் சந்திர சென், ஒரு கையில் வேட்டியையும் மறுகையில் சொம்பையும் பிடித்துக்கொண்டு ஓடிவந்து ரயிலைப் பிடிக்க முயன்றார். ஆனால், பயணிகள் அனைவரின் முன்னிலையிலும் ரயில் அவர் கண்ணெதிரே புறப்பட்டுச் சென்றது.
வரலாற்றை மாற்றிய புகார் கடிதம்
இதனால் பெரும் அவமானமும் கோபமும் அடைந்த ஓகில் சந்திர சென், சாஹிப்கஞ்ச் ரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒரு காரசாரமான கடிதம் எழுதினார். அதில் தனது அவஸ்தையை விவரித்ததோடு, பயணிகள் நலனில் அக்கறையில்லாமல் ரயிலைக் கிளப்பிய கார்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் இச்சம்பவத்தைப் பத்திரிகைகளில் புகாராக வெளியிடுவேன் என்றும் எச்சரித்தார்.
அவரது நகைச்சுவையான அதே சமயம் நியாயமான கோப வெளிப்பாட்டைக் கண்ட ரயில்வே அதிகாரிகள், அக்கோரிக்கையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டனர்.