சத்திஸ்கர் மாநிலம், கரிபந்த் மாவட்டத்தில் உள்ள மடகான் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மனிஷ் பிசி, புதிய சிம் கார்டு வாங்கச் சென்றபோது, அவரது வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம், தேவ்போக் பகுதியில் உள்ள ஒரு கடையில் மனிஷ் ஒரு புதிய சிம் கார்டை வாங்கினார். தனது நண்பர் கேம்ராஜின் உதவியுடன், அந்த எண்ணில் வாட்ஸ்அப்பை நிறுவியபோது, வாட்ஸ்அப் சுயவிவரப் படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதார் புகைப்படம் தானாகவே தோன்றியது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறை ஒரு வேடிக்கையாக எண்ணி இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதன்பின்னர், மனிஷின் போனுக்கு விராட் கோலி, யாஷ் தயாள் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின.
அழைத்த ஒவ்வொருவரும் மனிஷை "ரஜத்" என்று அழைத்தபோது, அவருக்கும் அவரது நண்பருக்கும் குழப்பமும் ஆச்சரியமும் உண்டானது. இது ஏதோ ஒரு குறும்பு வேலை என்று நினைத்து, இருவரும் பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் சுமார் இரண்டு வாரங்களாகப் பேசிக்கொண்டிருந்தனர்.