ஃபேமிலி மேன் என்கிற வெப் தொடரின் மூன்றாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த வெப் தொடரின் ஒரு காட்சியில், விஜய் சேதுபதி, மோரே என்கிற பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அந்த காட்சியில் விஜய் சேதுபதியுடன் வந்த சக போலீஸ் அதிகாரி ஒருவர் இங்க எப்படி இவ்வளவு தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என கேட்பார். இந்த இடம் தமிழ்நாட்டை போல இருப்பதாக சொல்லுவார். அந்த ஒரு காட்சியில் காட்டப்படும் மோரே என்கிற பகுதி ஒரு மினி தமிழ்நாடு என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பர்மாவிற்கு தமிழர்கள் வந்தது எப்படி?
ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில், இந்தியா, சீனா, வங்காளதேசம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை எல்லைகளாக கொண்ட அழகிய இயற்கை வளம் மிகுந்த நாடு தான் பர்மா, தற்போது அது மியான்மர் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. பர்மிய மொழியை தாய்மொழியாக கொண்டு உருவான இந்த நாடு, 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொங்கு வம்சத்தினரால் பேரரசு ஆக்கப்பட்டது. குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய பேரரசாக மாறிய நாடு என்கிற பெருமையும் பர்மாவுக்கு உண்டு. இயற்கை வளம்மிக்க நாடு என்பதாலேயே பல பேரரசுகள் பர்மாவை ஆழத் துடித்தனர்.
19ம் நூற்றாண்டில் மூன்று முறை நடந்த ஆங்கிலேய - பர்மிய படைகளுக்கு இடையிலான போர்களுக்கு பிறகு ஆங்கிலேய அரசு பர்மாவை கைப்பற்றி, தனது ஆட்சி அதிகாரத்தை செலுத்தியது. அதன்பின்னர் 1948-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரிட்டன் அரசிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர, ஜனநாயக நாடாக மாறியது பர்மா. அன்றில் இருந்து அங்கு புலம்பெயர்ந்த பலருள் தமிழர்கள் மிக முக்கியம் ஆனவர்கள். பர்மாவிற்கு தொழில் செய்யவும், விவசாயம் செய்யவும் அங்கு சென்ற தமிழர்கள் பலர், நிரந்தரமாகவே அங்கே தங்கிவிட்டனர்.