இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் மண்டி மாவட்டத்தில் உள்ள பனார்சா, டகோலி மற்றும் நாக்வெய்ன் ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சண்டிகர்-மண்டி-குல்லு தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என மண்டி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சச்சின் ஹிரேமத் தெரிவித்துள்ளார்.
25
மீட்புப் பணிகள் தீவிரம்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (HPSDMA) அறிக்கையின்படி, ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 16, 2025 வரை கனமழை மற்றும் சாலை விபத்துகள் காரணமாக 261 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், நிலச்சரிவு, திடீர் வெள்ளம், நீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்கியது மற்றும் வீடு இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 136 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்துகளில் 125 பேர் உயிரிழந்தனர்.
35
உயிரிழப்புகள், பெரும் சேதங்கள்
மண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காங்ரா (28), சம்பா (10), குல்லு (11) மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த பருவமழையால் 2,14,457 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், நீர்வழங்கல் திட்டங்கள், விவசாயம், தோட்டக்கலை மற்றும் மின்சார உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன. பொதுப்பணித் துறை மட்டும் 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்புகளை சந்தித்துள்ளது. விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் 83,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. NH-05 மற்றும் NH-305 போன்ற முக்கிய நெடுஞ்சாலைகள் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புறங்கள் துண்டிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தாமதமாகின்றன.
55
அத்தியாவசிய சேவைகள் முடக்கம்
மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் வானிலை எச்சரிக்கைகளைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.