
Hafiz Saeed mastermind behind the Pahalgam attack: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு உலகளாவிய பயங்கரவாதி 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு
லஷ்கர்-இ-தொய்பாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு பயங்கரவாதிகளே உள்ளனர். சில உள்ளூர் போராளிகள் அவர்களின் குழுவில் இருந்துள்ளனர். , இந்த பயங்கரவாத அமைப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. சோனமார்க், பூனமார்க் மற்றும் காண்டர்பால் உட்பட பிராந்தியம் முழுவதும் பல உயர்மட்ட தாக்குதல்களுக்குப் பின்னால் இந்த அமைப்பு இருந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள்
அக்டோபர் 2024 இல், பூனமார்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதே மாதத்தில், சோனமார்க் சுரங்கப்பாதை கட்டுமானத் தொழிலாளர்கள் மீது ஒரு கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் மற்றும் ஒரு மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோனமார்க் படுகொலையைத் தொடர்ந்து, இந்த அமைப்பின் முக்கிய நபரான குல்காமைச் சேர்ந்த A+ வகை லஷ்கர் பயங்கரவாதியான ஜுனைத் அகமது பட், டிசம்பர் 2024 இல் டச்சிகாமில் நடந்த ஒரு மோதலில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டான்.
பாகிஸ்தான் உளவுத்துறை உதவி
இந்த அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் தப்பித்து அருகிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குள் சென்று விட்டனர். ஒரு பெரிய தாக்குதலுக்குப் பிறகு, இந்த பயங்கரவாதிகள் பொதுவாக நிலத்தடிக்குச் சென்று, பாகிஸ்தானில் உள்ள தங்கள் தலைமையிடம் இருந்து புதிய உத்தரவுகளைப் பெறும் வரை அடர்ந்த காட்டு மறைவிடங்களில் ஒளிந்து கொள்கிறார்கள். பின்பு தகுந்த நேரம் பார்த்து மீண்டும் அட்டாக் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது துணை சைஃபுல்லா ஆகியோரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் அதன் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) இலிருந்து சித்தாந்த ரீதியாக மட்டுமல்லாமல் ஆயுத உதவி மற்றும் தந்திரோபாய வழிகாட்டுதலையும் பெறுகிறது என்று இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் கூறுகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்ட்டர்! லஷ்கர் இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை! ராணுவம் அதிரடி!
உள்ளூர்வாசிகள் உதவி
மேலும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்புக்கு ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சில உள்ளூர்வாசிகளும் ஆதரவு வழங்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. உள்ளூர் போராளிகள் மற்றும் தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்தி இந்த பயங்கரவாத அமைப்பினர் காரியம் சாதித்துக் கொள்வதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பஹல்காம் தாக்குதலில், பைசரன் பள்ளத்தாக்கிற்குள் மூன்று தனித்தனி இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வட்டாரங்களின்படி, ஐந்து பேர் ஒரே இடத்தில் ஒன்றாகக் கொல்லப்பட்டனர், இரண்டு பேர் திறந்தவெளியில் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள வேலி அமைப்புக்கு அருகில் குறிவைக்கப்பட்டனர். வேலியைத் தாண்டிச் சென்று தப்பிச் செல்ல முடிந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
அந்த 3 பயங்கரவாதிகள் யார்?
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். இதில் ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா ஆகிய இருவர் பாகிஸ்தானியர்கள். மூன்றாவது நபர் அப்துல் உசேன் தோகர். காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசிப்பவர். இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா vs பாகிஸ்தான்! ராணுவ பலம் யாருக்கு அதிகம்? முப்படையிலும் கெத்து யார்?