பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் ஒரு ரயில்வே வழித்தடம்!
இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், மகாராஷ்டிராவில் இன்னும் ஒரு ரயில் பாதை பிரிட்டிஷ் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாதையை வாங்க இந்திய ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் பலனில்லை. மத்திய மாகாண இரயில்வே இன்னும் பிரிட்டிஷ் நிறுவனமான கில்லிக் நிக்சன் & கோ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
சகுந்தலா எக்ஸ்பிரஸ்
இந்த நிறுவனம் சகுந்தலா எக்ஸ்பிரஸை அமராவதியில் இருந்து மகாராஷ்டிராவின் முர்தாசாபூர் வரை இயக்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இருப்பினும், இந்த வழித்தடம் பிரிட்டிஷ் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே ரூ.1.20 கோடி ராயல்டி செலுத்துகிறது.
சகுந்தலா ரயில் பாதை
அமராவதியில் இருந்து முர்தாசாபூர் வரையிலான 190 கி.மீ தூரத்தை இந்திய ரயில்வே கையகப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், அவை பலனளிக்கவில்லை. இந்த ரயில் பாதையில் சகுந்தலா பாசஞ்சர் என்ற ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இயக்கப்படுவதால், இது சகுந்தலா ரயில்பாதை என்று அழைக்கப்படுகிறது. அச்சல்பூர் மற்றும் யவத்மால் இடையே 17 நிலையங்களில் நின்று செல்லும் சகுந்தலா எக்ஸ்பிரஸ் சுமார் 70 ஆண்டுகளாக, நீராவி இன்ஜினில் இயங்கியது.
சகுந்தலா பயணிகள் ரயில்
சகுந்தலா பயணிகள் ரயிலில் 1994ஆம் ஆண்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது. அதன் பிறகு தவிர்க்கமுடியாத காரணங்களால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 5 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் தினமும் 800 முதல் 1000 பயணிகள் பயணித்தனர். இந்திய ரயில்வே 1951இல் தேசியமயமாக்கப்பட்டபோதும், இந்த ரயில் பாதை மட்டும் இந்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை.
அமராவதி-முர்தாசாபூர் ரயில் பாதை
இந்திய ரயில்வே அமராவதி-முர்தாசாபூர் ரயில் பாதையை பயன்படுத்தியதற்காக ஆண்டுக்கு ரூ.1.20 கோடி ராயல்டி தொகையை பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு செலுத்தி வந்தது. தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும் இப்போது ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தி பாதை
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பருத்தி விளைச்சல் அதிகம். இதனால் அமராவதியில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு பருத்தியைக் கொண்டுசெல்வதற்காக ஆங்கிலேயர்கள் இந்த ரயில்பாதையை அமைத்தனர். மத்திய மாகாண ரயில்வே நிறுவனம் (CPRC) இந்த ரயில்பாதையை உருவாக்க பிரிட்டனின் கில்லிக் நிக்சன் & கோ நிறுவனத்தை நியமித்தது.
இந்திய ரயில்வே ஒப்பந்தம்
இந்த ரயில் பாதையின் கட்டுமானம் 1903இல் தொடங்கப்பட்டு 1916 இல் நிறைவடைந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திய ரயில்வே இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, இந்திய ரயில்வே இந்த வழித்தடத்தை பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ராயல்டி செலுத்த வேண்டி வந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சகுந்தலா ரயில்பாதை விரிவாக்கம்
2016ஆம் ஆண்டில், இந்திய ரயில்வே இந்த சகுந்தலா ரயில்பாதையை 5 அடி 6 அங்குல அகல ரயில்பாதையாக மாற்ற முடிவு செய்தது. அதற்கான பணிகள் 2020ஆம் ஆண்டில் தொடங்கின.