மொத்தமாக நிலத்திற்குள் மூழ்கும் ஜோஷிமத் நகரம்; இஸ்ரோவின் அதிர்ச்சி புகைப்படங்கள்!!

First Published Jan 13, 2023, 12:08 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தேசிய தொலை உணர்வு மையம் (NRSC) ஜோஷிமத்தின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்,  எதிர்நோக்கி இருக்கும் நாட்களில் முழு ஜோஷிமத் நகரமே பூமிக்குள் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரோவின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நிலச்சரிவு சிறிய அளவில் நிகழ்ந்து வந்துள்ளது. அப்போது இது 8.9 செ.மீ. அளவிற்கு விரிசல் அல்லது நிலம் பூமிக்குள் புதைந்து வந்து இருக்கிறது. ஆனால் டிசம்பர் 27, 2022 மற்றும் ஜனவரி 8, 2023 க்கு இடையில், இந்த 12 நாட்களில் விரிசல் அல்லது நிலத்திற்குள் மூழ்குவது 5.4 செ.மீ. ஆக அதிகரித்துள்ளது. 

என்ன செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன?
ஜோஷிமத்-அவுலி சாலையும் விரிசல் ஏற்படும் நிலையில் இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ராணுவ ஹெலிபேட் மற்றும் நரசிங் கோவில் உட்பட மத்திய ஜோஷிமத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளது. இது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 2,180 மீட்டர் உயரத்தில் ஜோஷிமத்-அவுலி சாலைக்கு அருகில் இந்த பேரழிவு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

உத்தரகண்ட் அரசு, அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

உத்தரகாசியில் நிலநடுக்கம்
இதற்கிடையே, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை உத்தரகாசியில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.12 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜோஷிமத்தில் உள்ள அதிகாரிகள் உஷார் நிலையில் தங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ஜோஷிமத், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப் மற்றும் சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி ஆகிய  புகழ்பெற்ற புனித யாத்திரைகளுக்கான நுழைவாயில், நிலச் சரிவு, நில விரிசல், பூமிக்குள் நிலம் சிறிது சிறிதாக மூழ்குதால் போன்ற காரணங்களால் சவாலை எதிர்கொண்டுள்ளது. நகரில் வசிக்கும் 169 குடும்பங்கள் இதுவரை நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜோஷிர்மத் முழுவதும் நிலத்திற்குள் புதைந்துவிடும் என்ற சமீபத்திய இஸ்ரோ தகவல்கள் மனதை கலங்க வைக்கிறது. புனித ஸ்தலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் பக்தர்களும் கலங்கியுள்ளனர். இந்த சம்பவங்களுக்குப் பின்னர் ஜோஷிமத் பகுதியில் எந்த கட்டிடங்களும் எழுப்பக் கூடாது என்று உச்சநீதிமன்றமும் கண்டித்துள்ளது.

click me!