2003ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1915ஆம் ஆண்டு இதே ஜனவரி 9ஆம் தேதியில்தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு திரும்பி வந்தார். அந்த நாளை நினைவில் கொள்ளும் வகையில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மோடி ஆர்கைவ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அரிய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பாஜகவின் தொண்டராக செயல்பட்ட காலத்திலிருந்து அவர் பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள் செய்திருக்கிறார்.
மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது அந்நாடுகளில் உள்ள இந்தியர்களைச் சந்தித்து அவர்களுடன் நெருக்கமாகப் பழகி நட்பு கொண்டிருக்கிறார்.
1990களில் அவர் வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்குச் சென்றுள்ளார். “நான் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் எனக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. உலகம் எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது, எத்துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன, இந்தியாவின் நிலை எங்கே இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள பயணங்கள் உதவியிருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2003ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். அரசு நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்கவது, சுற்றுலாவை மேம்படுத்துவது முதலியவை பற்றி அன்று பேசினார்.
ஆண்டுதோறும் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாள் விழா நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.