சந்திரயான் முதல் ககன்யான் வரை - இஸ்ரோவின் புதிய திட்டங்கள்

First Published Jan 3, 2023, 5:52 PM IST

2023ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தக் காத்திருக்கிறது. அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திரயான் 3, ககன்யான் 2 போன்ற திட்டங்களும் உள்ளன.

நிலவின் மறுபக்கத்தை ஆராய்வதற்கான இஸ்ரோவின் சந்திரயான் - 2 விண்கலம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு சந்திரயான் - 3 என்ற புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக முந்திய முறை நேர்ந்த தவறுகளைத் திருத்தி அமைத்துள்ளது. இந்த முறை சந்திரயான் பயணம் வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.

சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏற்கெனவே செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. இந்நிலையில் இஸ்ரோ தனது முதல் முயற்சியாக அனுப்பவுள்ள செயற்கைக் கோள் ஆதித்யா எல்1.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆர்எல்வி ராக்கெட் சோதனையையும் இந்த ஆண்டில் நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இச்சோதனை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏரோனாடிக்கல் பரிசோதனைத் தளத்தில் நடத்தப்பட உள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ககன்யான் - 2 என்ற ஆளில்லா விண்கலத்தை இஸ்ரோ இந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்ப உள்ளது. விண்ணுக்கு அனுப்புவதற்கான விண்வெளி வீரர்களைத் தயார்படுத்த பயிற்சியையும் ஏற்கெனவே தொடங்கி நடத்திவருகிறது.

இஸ்ரோ இந்த ஆண்டு சிறிய செயற்கைக் கோள்கைளை விண்ணுக்கும் அனுப்பும் ராக்கெட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளது. சென்ற ஆண்டு முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்றில் செயற்கைக் கோள் இத்திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

click me!