டிச. 11 வரை படிவங்களை சமர்ப்பிக்கலாம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து வாக்கு மைய நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை விநியோகித்தனர்.
இந்தப் படிவங்களை நிரப்பித் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறுகிய கால அவகாசத்திற்குள் பணியை முடிப்பது சாத்தியமில்லை என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், மன அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்தக் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் டிசம்பர் 11 வரை திருப்பி ஒப்படைக்கலாம்.