பலரது குடும்பங்களை சீரழித்த லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி துறையை ஏற்று நடத்தி வருகிறது. 1967-ம் ஆண்டு முதல் கேரள மாநில அரசு லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக லாட்டரி விற்பனையை தொடங்கியது கேரள அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் லாட்டரி துறையின் தலைமை அலுவலகம் மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கார்கிபவனில் செயல்பட்டு வருகிறது. இங்குதான் நாள்தோறும் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கலும் நடைபெற்று வருகிறது. கேரளா அரசின் லாட்டரி துறை வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு லாட்டரிக்கான குலுக்கல்களை நடத்தி வெற்றியாளர்களை அறிவித்து வருகிறது.
சாதாரண காலங்களை விட விஷேச நாட்களை குறி வைத்து பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையையும் கேரள அரசு நடத்தி வருகிறது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், கோடைக்கால பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர் மற்றும் பூஜை பம்பர் என ஆறு வித பம்பர் லாட்டரிகளை கேரளா அரசு விற்பனை செய்கிறது. இதில் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் பரிசுகளையும் அள்ளித்தருகிறது. அண்மையில் மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை முடிந்து குலுக்கல் நடத்தி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
kerala lottery
இந்நிலையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் கேரள அரசு ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெடை அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கியுள்ளது. இதில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கிய முதல் நாளே சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்தன. முதற்கட்டமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த மூன்று நாட்களில் மொத்த 10 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
2வது & 3வது பரிசு எவ்வளவு?
ஓணம் பம்பர் லாட்டரியில் 2வது பரிசாக தலா ஒரு கோடி ரூபாய் என 20 நபருக்கு வழங்கப்பட உள்ளது. இதில் விற்பனையாளர் கமிஷன் மட்டுமே பரிசுத் தொகையில் 10% வழங்கபட உள்ளது. அதாவது, ஒரு வெற்றி டிக்கெட்டை விற்றவருக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் தலா 20 ஏஜென்டுகளுக்கும் இந்த 20 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதே போல் 3வது பரிசும் தலா 20 நபர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் விற்பனையாளர் கமிஷன் மட்டுமே பரிசுத் தொகையில் 10% வழங்கபட உள்ளது. அதாவது, ஒரு வெற்றி டிக்கெட்டை விற்றவருக்கு 5 லட்சம் ரூபாய் வீதம் தலா 20 ஏஜென்டுகளுக்கும் இந்த 1 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.