ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பிரிவினைவாதத்தையும், "தவறான தகவல்களையும்" பரப்புவதாகக் கூறி, 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் அரசியலமைப்பு நிபுணர் ஏ.ஜி. நூரானி ஆகியோரின் புத்தகங்களும் அடங்கும். இந்த புத்தகங்களின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், "வரலாற்று அல்லது அரசியல் விமர்சனங்கள் என்ற போர்வையில், தவறான தகவல்களையும் பிரிவினைவாத இலக்கியங்களையும் திட்டமிட்டுப் பரப்பி வருவதாக" விசாரணை மற்றும் நம்பகமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள், "பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும்" அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.