கோவாவில் கடற்கரையோரம் இட்லி சாம்பார் விற்பதால் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
இட்லி - சாம்பார் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அந்த உணவை உலகம் முழுவதும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இட்லி - சாம்பார் விற்பதால் கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருப்பதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் அம்மாநில பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபா. அவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
24
GOA MLA Michael Lobo
கோவாவின் கலங்குட்டு பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மைக்கேல் லோபோ, கடலோர மாநிலங்களுக்கு வெளிநாட்டு பயணிகளின் வருகை குறைந்தால் அதற்கு அரசு மட்டுமே பொறுப்பாகாது என கூறியுள்ள அவர், அங்குள்ள பங்குதாரர்களும் அதற்கு பொறுப்பு என தெரிவித்தார். கோவா மக்கள் தங்களுக்கு சொந்தமான கடலோர இடங்களை, வெளிமாநிலத்தவருக்கு வாடகைக்கு விட்டுள்ளது வருத்தம் அளிப்பதாகவும் லோபோ தெரிவித்துள்ளார்.
கோவாவிற்கு வந்து பெங்களூரை சேர்ந்தவர்கள் வட பாவ் விற்கிறார்கள். சிலர் இங்கு இட்லி - சாம்பார் விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் கடந்த 2 ஆண்டுகளாக கோவாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருக்கிறது என அவர் கூறினாலும் அந்த உணவு எந்த வகையில் அவர்களின் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதித்தது என்பது பற்றி லோபோ விரிவாக கூறவில்லை.
தொடர்ந்து பேசிய லோபோ, வெளிநாட்டில் இருந்து வரும் இளஞர்கள் கோவாவை காட்டிலும் மற்ற இடங்களுக்கு செல்ல முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார். மேலும் சுற்றுலாத் துறையோடு, அங்கு தொழில் செய்பவர்களும் கலந்து பேசி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.
44
BJP MLA Michael Lobo
போர் காரணமான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருவதில்லை என கூறிய லோபோ, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் கோவாவுக்கு வருவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். இங்கு நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் சுற்றுலாத் துறை மேலும் பின்னடைவை சந்திக்கும் என லோபோ எச்சரித்தார். மேலும் கோவாவில் இட்லி - சாம்பார் விற்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.