இந்தியப் புலிகள் சரணாலயங்கள்
இந்தியாவில் பல வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவை புலிகளின் பல உயிரினங்களின் தாயகமாக உள்ளன. அவற்றில் சில சரணாலயங்கள் ஜீப்பில் சென்று பார்வையிடும் வசதியுடன் அமைந்துள்ளன. அவை எங்கெங்கே உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்னென்ன என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ரன்தம்போர் தேசிய பூங்கா (ராஜஸ்தான்)
இங்கு வங்காள புலிகளின் எண்ணிக்கை அதிகம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தேசியப் பூங்கா, பலவித வனவிலங்குகளைக் கொண்டது. புகழ்பெற்ற காட்டுயிர் மண்டலங்களை பார்வையாளர்கள் ஜீப் சவாரி மூலம் கண்டுகளிக்க இந்தப் பூங்கா அனுமதிக்கிறது.
காசிரங்கா தேசிய பூங்கா (அசாம்)
காசிரங்கா தேசியப் பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இந்தப் பூங்காவில் இருக்கும் இந்தியக் கொம்பு காண்டாமிருகம் குறிப்பிடத்தக்கது. இங்கும் புலிகள் வசிக்கின்றன. வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகைப் பார்த்து ரசிக்க ஜீப் சவாரியும் உண்டு.
பாந்தவ்கர் தேசிய பூங்கா (மத்திய பிரதேசம்)
வங்காளப் புலிகள் அதிகமாக வாழும் பகுதிகளில் பாந்தவ்கர் தேசியப் பூங்காவும் ஒன்றாகும். இந்தப் பூங்காவின் அடர்ந்த காடுகள் மற்றும் புல்வெளிகளைக் காண ஜீப் சவாரி மேற்கொள்ளலாம்.
சரிஸ்கா வனவிலங்கு சரணாலயம் (ராஜஸ்தான்)
சரிஸ்கா வனவிலங்கு புலிகள், சிறுத்தைகள் மற்றும் பலவகையான பறவை இனங்களின் தாயகமாக விளங்குகிறது. காடுகள், புல்வெளிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உடைய இடிபாடுகள் நிரம்பிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ஜீப் சவாரியில் சென்று ரசிக்கலாம்.
மனாஸ் தேசிய பூங்கா (அசாம்)
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான மனாஸ் தேசியப் பூங்கா புலிகள், யானைகள், கோல்டன் லாங்கர்கள், காண்டாமிருகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் தாயகமாகும். மனாஸின் பரந்த நிலப்பரப்பு மற்றும் வனவிலங்குகளைக் காண ஜீப் சவாரி செல்லலாம்.
சுந்தரவன தேசிய பூங்கா (மேற்கு வங்கம்)
சுந்தரவனக் காடு உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு. இது வங்காளப் புலிகளுக்கு பெயர் பெற்றது. இந்தக் காட்டைக் கண்டுகளிக்க படகு சவாரி செய்யலாம். சில பகுதிகளை சாலை வழியாகவும் கடக்கலாம்.
கன்ஹா தேசிய பூங்கா (மத்திய பிரதேசம்)
கன்ஹா தேசியப் பூங்கா அடர்ந்த சால் காடுகள் மற்றும் புலிகளுக்குப் பெயர் பெற்றது. ஜீப் சவாரியில் அதன் பரந்த நிலப்பரப்பையும் புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல வன உயிரினங்களையும் காணலாம்.
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா (உத்தரகாண்ட்)
வங்காளப் புலிகள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பறவை இனங்கள் வசிக்கும் இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா. இங்குள்ள திகாலா மற்றும் பிஜ்ராணி மண்டலங்கள் உட்பட பல பகுதிகளுக்கு ஜீப் சவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது.