tirupati leopard attack
திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தை
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தரிசனம் செய்ய வருவார்கள். திருப்பதி வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நடைபயணமாக மலையேறுவார்கள். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 3 வயது சிறுவன் தனது பொற்றோருடன் மலைப்பாதையில் நடந்து சென்ற போது சிறுத்தை கவ்வி பிடித்துச் சென்றது. இதனைப் பார்த்த பெற்றோர், பக்தர்கள் துரத்தியதால் மற்றும் வனத்துறையினர் விரட்டியதால் அச்சிறுவனை விட்டு விட்டு, சிறுத்தை தப்பி ஓடியது.
Leopard
சிறுமியை கொன்ற சிறுத்தை
இந்த சம்பவம் நடந்து அடுத்த 10 தினங்களிலேயே நடைபெற்ற மற்றொரு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த மாதம் 11ஆம் தேதி பெற்றோர்களுக்கு சற்று முன்பாக அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற சேர்ந்தலக்ஷிதா (6) எனும் சிறுமியை கவ்விய சிறுத்தை காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்றது. இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் சிறுமியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த நாள் காலையில் சிறுமியின் சிதைந்த உடல் பகுதி மட்டும் மீட்கப்பட்டது. இதனால் திருப்பதி மலைக்கு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
tirumala
கூண்டு வைத்த வனத்துறை
இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்தனர். அப்போது சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் அதனை பாக்கராபேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் கூண்டு வைக்கப்பட்டது.
அடுத்தடுத்து சிக்கிய 5 சிறுத்தைகள்
இதன் காரணமாக அடுத்தடுத்து 3 சிறுத்தைகள் சிக்கியது. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, 17ஆம் தேதி, இதனையடுத்து 4வது சிறுத்தை ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிடிபட்டது. இந்தநிலையில் இன்று மீண்டும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. திருப்பதி மலைப்பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் ஒன்றரை மாதத்தில் 5 சிறுத்தைகள் பிடிபட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. இதனையடுத்து சிறுத்தைகளை உயிரியல் பூங்காவிற்கு அனுப்பிவைத்த வனத்துறையினர் சிறுத்தையின் உடல்நிலையை பரிசோதித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
இதையும் படியுங்கள்
ஜவான் படத்தை எப்படியாவது ஓட வச்சிரு ஆண்டவா.. ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..