
கருணைக் கிழங்கை வைத்து வழக்கமாக பொரியல், வறுவல் என செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், அதே கருணைக் கிழங்கை யாழ்ப்பாணம் ஸ்டைலில் மசாலாக்கள் சேர்த்து வறுத்து, தொக்கு பதத்தில் செய்து பாருங்கள். காரசாரமான மசாலா, புளிப்புச் சுவை, வெங்காயம், தக்காளியின் மணம் என ஒவ்வொரு சுவையும் ஒன்றோடு ஒன்று கலந்து நாவிற்கு விருந்தளிக்கும்.
குறிப்பாக, சூடான சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடிஷாக இந்த யாழ்ப்பாணம் கருணைக் கிழங்கு வறுத்த தொக்கு இருக்கும். வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே ஹோட்டல் சுவையில் இந்த ரெசிபியைச் செய்துவிடலாம். அப்படியென்றால், இந்த ருசியான தொக்கை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
கருணைக் கிழங்கை வேக வைக்க
கருணைக் கிழங்கை மசாலா தடவி வறுக்க
தொக்கு செய்ய
கருணைக் கிழங்கை வேக வைக்கவும்
முதலில் கருணைக் கிழங்கை நன்றாகக் கழுவி தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய கருணைக் கிழங்கு, மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். கிழங்கு பாதியளவு அல்லது முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
மசாலா தடவவும்
ஒரு தட்டில் குழம்பு மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, கெட்டியான புளிக்கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த மசாலா கலவையை வேக வைத்த கருணைக் கிழங்கின் மீது சேர்த்து அனைத்து துண்டுகளிலும் மசாலா படும்படி மெதுவாகப் புரட்டிக் கொள்ளவும்.
கருணைக் கிழங்கை வறுக்கவும்
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் மசாலா தடவி வைத்துள்ள கருணைக் கிழங்கு துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்பி வைக்கவும். அதன் மீது சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் திருப்பிப் போட்டு வறுக்கவும். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
தொக்கிற்கான மசாலா தயாரிக்கவும்
அதே தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். தொடர்ந்து தக்காளியை அரைத்து அல்லது நன்றாக மசித்துச் சேர்த்து குழைய வதக்கவும்.
மசாலாத் தொக்கு தயாரிக்கவும்
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா அனைத்தும் ஒன்றாகக் கலந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்குவது முக்கியம்.
வறுத்த கருணைக் கிழங்கைச் சேர்க்கவும்
இப்போது ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள கருணைக் கிழங்கைத் தொக்கில் சேர்த்து மெதுவாகக் கிளறவும். கிழங்கின் மீது மசாலா முழுவதுமாகப் படும்படி கலந்து விடவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான யாழ்ப்பாணம் கருணைக் கிழங்கு வறுத்த தொக்கு தயார்.
இந்த யாழ்ப்பாணம் ஸ்டைல் கருணைக் கிழங்கு வறுத்த தொக்கை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். குறிப்பாக ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, தோசை, இட்லிக்கும் சைடிஷாகப் பரிமாறலாம்.
சிறிய ஆரோக்கியக் குறிப்பு: கருணைக் கிழங்கை நன்றாக வேகவைத்த பின்னரே சாப்பிட வேண்டும். சிலருக்கு கருணைக் கிழங்கு அரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முழுமையாக வேகவைத்து பயன்படுத்துவது நல்லது.
மொறுமொறுப்பான கருணைக் கிழங்கு, காரசாரமான மசாலா, புளிப்புச் சுவை என அசத்தும் இந்த யாழ்ப்பாணம் கருணைக் கிழங்கு வறுத்த தொக்கை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.