செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர் மீது பீர்க்கன்கரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம் காவல் நிலையலங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் உள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெடுங்குன்றம் ஊராட்சி துணை தலைவராக பதவி ஏற்கும் போதே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டில் சென்னை வண்டலூரில் அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்த கட்சிக் கூட்டத்தின்போது, பாஜகவில் இணைய ரவுடி சூர்யா வந்திருந்த போது அவரை கைது செய்ய திட்டமிட்டனர். ஆனார் இதை எப்படியோ அறிந்து கொண்ட சூர்யா அங்கிருந்து தப்பித்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு ஜாமீனில் இருந்து வெளியே வந்த ரவுடி சூர்யா பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் மாநில பட்டியலினப் பிரிவு செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது . இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதா சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெடுங்குன்றம் சூர்யா;- அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்து, இப்போது பொறுப்பு பெற்றுள்ளேன். அண்ணாமலை சொன்னால், தேர்தலிலும் போட்டியிடத் தயார் என தெரிவித்துள்ளார். இனி எந்த பிரச்சினையிலும் தலையிடப் போவது இல்லை என்றும், நீதிமன்றத்திற்கு சரியாக சென்று ஆஜராகி, வழக்கை முடிக்க உள்ளதாகவும் கூறினார்.