சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மாதையன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், இவரது மனைவி சுந்தராம்பாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 5-ம் தேதி சுந்தராம்பாள் தனது மகனை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் சுந்தராம்பாள் வீட்டில் நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். ஊருக்கு திரும்பி சுந்தராம்பாள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சுந்தராம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
arrest 2
இதில் கொள்ளை சம்பவம் நடந்த அன்று அந்த வீட்டிற்குள் நுழைந்தது சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தத சக்திவேல் (24) மற்றும் ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி சியாமளாதேவி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேலுக்கும், சியாமளா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பதற்காக, இந்த கள்ளக்காதல் ஜோடி சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.