செங்கல்பட்டு மக்கான்சந்து தெருவை சேர்ந்தவர் சாகராஜ்(48). இவர் மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். செங்கல்பட்டு வடக்கு நகர செயலாளராகவும் உள்ளார். வழக்கம் போல நேற்று இரவு 9 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாகராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாமக பிரமுகர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உயரதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே, பாமக பிரமுகர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அஜய் என்பவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த அப்பகுதி நேற்று பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்ததால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகரப் பகுதியில் பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது அக்கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.