லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. அதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த விஜய் தளபதி 65 பட வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் இயக்குறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் தளபதி 65 படத்திற்கான பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
சென்னையில் பூஜையை முடித்த கையோடு தேர்தல் வாக்குப்பதிவிற்காக காத்திருந்த விஜய் மறுநாளே ஜார்ஜியாவிற்கு பறந்தார். அங்கு கடந்த 9ம் தேதி தளபதி 65 படக்குழுவுடன் விஜய் ஷூட்டிங்கில் பங்கேற்ற புகைப்படம் வெளியானது.
பெரும்பாலான காட்சிகளை ஜார்ஜியாவில் எடுக்க திட்டமிட்டு சென்ற தளபதி 65 படக்குழுவினருக்கு தற்போது கடும் சிக்கல் உருவாகியுள்ளது. ஜார்ஜியாவில் தற்போது கடும் குளிரும், மழையும் பெய்து வருவதால் படப்பிடிப்பை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிகிறது.
இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாததால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டுத்தான்சென்னை திரும்புவோம் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.